ADDED : ஆக 01, 2026 11:06 PM
பெலகாவி: பெலகாவியில், சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது வேகமாக சென்ற கார் மோதியதில், 36 ஆடுகள் உயிரிழந்தன.
பெலகாவி மாவட்டம், பைலஹொங்கல் தாலுகாவின் கெங்கனுார் கிராமத்தை சேர்ந்த சந்திரப்பா ஹிட்டலமணி, தொட்டவாடா கிராமத்தை சேர்ந்த பீரப்பா ஆகியோர், 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மதியம், ஜாலிகொப்பா கிராமம் அருகில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆடுகள் சாலையை கடக்கும் போது, வேகமாக வந்த கார் ஒன்று, ஆடுகள் மீது மோதியது.
இதில், பல ஆடுகள் துாக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில், 36 ஆடுகள் உயிரிழந்தன. 20க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றன.
கர்ப்பமாக இருந்த ஆடுகளின் வயிறு கிழிந்து, அதில் இருந்த குட்டிகளும் இறந்து கிடந்தன. இதை பார்த்த அதன் உரிமையாளர்கள், கண்ணீர் விட்டு கதறினர்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோடி விட்டார். பைலஹொங்கல் போலீசில், ஆடுகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின்படி, காரின் எண்ணை வைத்து, அதன் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
