ADDED : ஆக 01, 2026 11:05 PM

பெங்களூரு: பெங்களூரில், 'ராபிடோ பைக் டாக்சி'யில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தால், மூன்று வாரங்களாக மென் பொறியாளர் ஒருவர், 'கோமா'வில் உள்ளார்.
பெங்களூரை சேர்ந்த அமர்த்தியா குமார், 26. ஜூலை 13ம் தேதி இரவு, பணி முடிந்து வீட்டுக்கு செல்ல சீகேஹள்ளியில் இருந்து ஹூடிக்கு, பைக் டாக்சியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஐ.டி.பி.எல்., சாலையில் ஏற்பட்ட விபத்தில், அமர்த்தியாகுமார் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இது குறித்து, அவரது சகோதரி அபிக்யா ராணி குறிப்பிட்டுள்ளதாவது:
என் சகோதரர் அமர்த்தியா குமார், சீகேஹள்ளியில் இருந்து ஹூடிக்கு செல்ல, பைக் டாக்சி முன்பதிவு செய்திருந்தார். பைக் டாக்சி ஓட்டுநர் பிரகாஷ், என் சகோதரரை ஏற்றிக் கொண்டு செல்லும் போது, ஒயிட்பீல்டில் உள்ள ஐ.டி.பி.எல்., சாலையில் பார்முலா ஒன் சந்திப்பு அருகில், கார் ஒன்று பைக் மீது மோதிவிட்டு சென்று விட்டது.
இதில், என் சகோதரர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பைக் டாக்சி ஓட்டுநர் பிரகாஷ், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். என் சகோதரர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால், மூன்று வாரங்களாக கோமாவில் உள்ளார்.
ஓட்டுநரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுநர் அதிகாரபூர்வமாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம் ஓட்டியிருக்கலாம் என்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இதை உடனடியாக சரி பார்த்து விசாரிக்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
அமர்த்தியா குமாரின் சகோதரி, ஒயிட் பீல்டு போக்குவரத்து போலீசில் அளித்த புகாரை அடுத்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
