/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
38 லிட்டர் பால்: ரூ.1 லட்சம் பரிசு பெற்ற பசு
/
38 லிட்டர் பால்: ரூ.1 லட்சம் பரிசு பெற்ற பசு
ADDED : செப் 29, 2025 06:01 AM

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் நடந்த மாநில அளவிலான பால் கறக்கும் போட்டியில் 38 லிட்டர் பால் கறந்த பசு முதல் பரிசு வென்றது.
தசராவை முன்னிட்டு மைசூரில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், உணவு மேளா, இளைஞர் தசரா, மகளிர் தசரா, மலர் கண்காட்சி உட்பட பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இவற்றில் பசுக்களில் பால் கறக்கும் போட்டியும் ஒன்றாகும்.
விவசாய தசரா துணை கமிட்டி, கால்நடைத்துறை சார்பில், மைசூரு நகரின், ஜெ.கே.மைதானத்தில் நேற்று முன்தினம் மாநில அளவிலான பால் கறக்கும் போட்டி நடந்தது.
இப்போட்டியில் பங்கேற்க மைசூரு, மாண்டியா, பெங்களூரு மாவட்டங்களில் இருந்து பசுக்கள் கொண்டு வரப்பட்டன. பால் கறக்கும் போட்டியில் பங்கேற்ற பலரும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
அதிகாலை 6:30 மணிக்கு பசுக்களிடம் முதல் சுற்று பால் கறக்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு அதே பசுக்களிடம் பால் கறக்கப்பட்டது. இரண்டு வேளையும் கறந்த பாலின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பெங்களூரு, ஆனேக்கல்லில் இருந்து வந்த அஜய் என்பவர், காலையில் 21.5 லிட்டர், மாலையில் 16.650 லிட்டர் என மொத்தம் 38.150 லிட்டர் பால் கறந்து, முதல் பரிசு பெற்றார்.
மைசூரின், பிரியாபட்டணாவின் சிட்டேனஹள்ளி கிராமத்தின் சஞ்சீவ், காலையில் 20.150 லிட்டர், மாலையில் 17 லிட்டர் என 37.150 லிட்டர் கறந்து, இரண்டாவது பரிசு வென்றார்.
பெங்களூரின் நாகரபாவியின் ஹர்ஷித்கவுடா, காலையில் 19 லிட்டர், மாலையில் 18.100 லிட்டர் என, 37.100 லிட்டர் கறந்து மூன்றாவது இடமும்; ஸ்ரீரங்கப்பட்டணாவின் கஞ்சாம் கிராமத்தின் நிஷாந்த் சிவராமு, காலையில் 17.800 லிட்டர், மாலையில் 19.050 லிட்டர் என, 36.850 லிட்டர் பால் கறந்து நான்காவது இடமும் பெற்றனர்.
முதல் பரிசு 1 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 80,000 ரூபாய், மூன்றாம் பரிசு 60,000 ரூபாய், நான்காம் பரிசு 40,000 ரூபாய் வழங்கப்பட்டன.
மற்ற போட்டியாளர்களுக்கு தலா 10,000 ஊக்கத்தொகை, நினைவு கேடயம் வழங்கப்பட்டன. கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ், பால் கறந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அமைச்சர் வெங்கடேஷ் பேசியதாவது:
சமீப ஆண்டுகளாக பால் உற்பத்தியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் பயனாக பால் உற்பத்தி அதிகரிக்கிறது. தினமும் 1 கோடி லிட்டருக்கும் அதிகமான பால் உற்பத்தியாகிறது. விவசாயிகளின் நலனுக்காக, மாநில அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. இதை அவர்கள் பயன் படுத்த வேண்டும்.
விவசாயிகள் பால் உற்பத்தி தொழிலை, துணை தொழிலாக நினைக்காமல், முக்கிய தொழிலாக நினைத்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -