நிறுத்தத்தில் நிறுத்தியிருந்த 4 ஆம்னி பஸ்கள் தீயில் நாசம்
நிறுத்தத்தில் நிறுத்தியிருந்த 4 ஆம்னி பஸ்கள் தீயில் நாசம்
ADDED : ஜூலை 26, 2026 11:58 PM

சர்ஜாபூர்: நான்கு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன.
பெங்களூரு ரூரல் ஹலேசந்தாபூரில் ஆம்னி பஸ்கள் நிறுத்தம் உள்ளது. நேற்று மதியம் 2:00 மணிக்கு அந்த நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஆம்னி பஸ் ஒன்றில் திடீரென புகை கிளம்பியது.
பஸ்சுக்குள் இருந்த கிளீனர் மஞ்சுநாத் வெளியே வந்து பார்த்தார். அப்போது பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதிர்ச்சி அடைந்த அவர், டிரைவருக்கு போன் செய்தார். அவர் எடுக்கவில்லை.
பார்க்கிங் ஊழியர்கள் உதவியுடன் வாளியில் தண்ணீர் எடுத்து வந்து, பஸ்சில் பிடித்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவி, பக்கத்தில் நின்ற, மூன்று ஆம்னி பஸ்கள் மீதும் பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த சூர்யாநகர் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்களில் பிடித்த தீயை அணைத்தனர்.
ஆனாலும் நான்கு பஸ்களும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. வயர்களில் ஏற்பட்ட உரசலால் தீ விபத்து நடந்ததா அல்லது வேறு காரணமா என விசாரணை நடக்கிறது.
