புதுப்பிக்கப்பட்ட 4 ரயில் நிலையங்கள் வரும் 17ல் திறக்க முடிவு
புதுப்பிக்கப்பட்ட 4 ரயில் நிலையங்கள் வரும் 17ல் திறக்க முடிவு
ADDED : ஜூலை 12, 2026 11:48 PM

பெங்களூரு: மத்திய அரசின், 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், அதி நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட, கர்நாடகாவின் நான்கு முக்கிய ரயில் நிலையங்கள், வரும், 17ம் தேதி திறக்கப்படுகின்றன.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு, அம்ருத் பாரத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கொப்பால் ரயில் நிலையம், பாகல்கோட் மாவட்டத்தின் பாதாமி, தார்வாட் மாவட்டத்தின் ஆள்னாவரா, தட்சிண கன்னடா மாவட்டத்தின் பண்ட்வால் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள், அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, கொப்பால் ரயில் நிலையம், 21.1 கோடி ரூபாய் செலவில், சகல வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு ரயில் நிலையங்களிலும், பயணியர் நடமாட வசதியாக விஸ்தாரமான பிளாட்பாரம்கள், பாதுகாப்பான மேற்கூரை, இருக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, தானியங்கி எஸ்கலேட்டர்கள், அதிநவீன லிப்ட் அமைக்கப்பட்டுள்ளன. பயணியர் காத்திருக்கும் அறைகள், விமான நிலையம் போல டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களின் முன் பகுதி சுவர்கள், ரயில் நிலைய வளாகத்தின் சுவர்களில் அந்தந்த பகுதிகளின் வரலாறு, கலாசாரத்தை விவரிக்கும் கலை சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.
பார்க்கிங் வசதி, விசாலமான நுழை வாசல், வெளியேறும் வசதி போன்றவற்றுடன் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றன.
புதிதாக நவீனப்படுத்தப்பட்ட நான்கு ரயில் நிலையங்களும், ஜூலை 17ம் தேதியன்று திறக்கப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, ரயில் நிலையங்களை திறந்து வைப்பார். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
