விளையாட்டு போட்டிக்கு பயிற்சி தங்கவயலில் 54 பேர் தேர்வு
விளையாட்டு போட்டிக்கு பயிற்சி தங்கவயலில் 54 பேர் தேர்வு
ADDED : ஜூலை 21, 2026 02:58 AM

தங்கவயல்: பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள 12 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்க தங்கவயல் ஜிம்கானா மைதானத்தில் நடந்த தேர்வில் 250 பேர் பங்கேற்றனர்.
கால்பந்து, ஓட்டப்பந்தயம், நீச்சல் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்ய ராணுவத்தின் எம்.இ.ஜி., பிரிவு; மத்திய அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கேலோ இந்தியா; பெங்களூரு சூட்டர்ஸ் ஆகிய விளையாட்டு துறை அதிகாரிகள் முன்னிலையில் தேர்வு நடந்தது. ஓடுதல், நீளம், உயரம் தாண்டுதல், கால்பந்து ஆடுதல், உடற்பயிற்சி என பல வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன.
ஜூன் 27ல் நடந்த 'கோல்டு ரஷ்' கால்பந்து போட்டிகளில் விளையாடிய சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கால்பந்து போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காத சிலர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, தங்கவயலில் 12 முதல் 21 வயதுள்ள ஆர்வமுள்ளோருக்கு மேலும் பயிற்சி அளிக்க நேற்று தேர்வு நடத்தப்பட்டது.
ராணுவத்தின் எம்.இ.ஜி., விளையாட்டுப் பிரிவு அதிகாரி கர்னல் கோவிந்த சவுத்ரி, கேலோ இந்தியா பிரிவின் அதிகாரி பிரதீப் நாயுடு, விளையாட்டு பயிற்சியாளர்கள் பெங்களூரு சூட்டர்ஸ் அணியின் ராகுல் துபே, கேலோ இந்தியா பயிற்சியாளர் சுஜித் குமார், ரமேஷ் நாயக், விமல் வில்சன் ஆகியோர் பங்கேற்று 54 பேரை முதற் கட்டமாக தேர்வு செய்தனர்.
கேலோ இந்தியா விளையாட்டுத் துறை அதிகாரி பிரதீப் நாயுடு கூறுகையில், ''விளையாட்டு பயிற்சிக்கு தேர்வான அனைவருக்கும் தாலுகா அளவில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும். இவர்களில் சிறந்தவர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாட தேர்வு செய்யப்படுவர்.
''விளையாடுவதால் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒழுக்கம் ஏற்படும். தீய பழக்கங்களை தவிர்க்க முடியும். அரசின் வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை கிடைக்கும். நாடெங்கிலும் ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை தயார்படுத்த இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த வாரமும் தங்கவயல் ஜிம்கானா மைதானத்தில் தேர்வு நடக்கும்,'' என்றார்.
