தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மழை பற்றாக்குறையால் ஒரு சொட்டு நீரின்றி வறண்ட 5,862 ஏரிகள்!: கிராம பஞ்.,களில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு

 மழை பற்றாக்குறையால் ஒரு சொட்டு நீரின்றி வறண்ட 5,862 ஏரிகள்!: கிராம பஞ்.,களில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு

 மழை பற்றாக்குறையால் ஒரு சொட்டு நீரின்றி வறண்ட 5,862 ஏரிகள்!: கிராம பஞ்.,களில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு


UPDATED : ஜூலை 23, 2026 05:57 AM

ADDED : ஜூலை 22, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 05:57 AM ADDED : ஜூலை 22, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் போதிய மழையின்மையால், அணைகள் மட்டுமின்றி, கிராமங்களில் உள்ள 5,862 ஏரிகள் ஒரு சொட்டு நீரின்றி வறண்டு போயுள்ளன. இதனால், கிராம பஞ்சாயத்துகளில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிக்கும், 'எல் நினோ' எனும் வானிலை நிகழ்வு கடந்த ஜூன் மாதம் உருவானது. வரும் நாட்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும், இது உலகம் முழுதும் மழை பொழிவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதன்படி, சில இடங்களில் மழை பெய்யாமலும், சில இடங்களில் அதீத மழை பொழிவு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், 150 ஆண்டுகளில் இல்லாத மிக வலிமையான எல் நினோ தற்போது உருவாகி இருப்பதாகவும் எச்சரித்து உள்ளனர்.

* குறைந்தது மழை

இதன் விளைவாக, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை குறைந்து, வறட்சி அபாயம் உருவாகி உள்ளது. இந்தாண்டு மாநிலத்தில் வழக்கத்தை விட 37 சதவீதம் குறைவான மழை பெய்து உள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைத்து அணைகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

மேலும், விவசாயத்துக்கான நீர் வினியோகம், இன்னும் துவங்கவில்லை. இது பல மாவட்டங்களில் சாகுபடி நடவடிக்கைகளை பாதித்து உள்ளது. இதற்கிடையில், அணைகளை தவிர, விவசாயத்துக்கு முதுகெலும்பாக விளங்கிய ஏரிகளிலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பருவமழை துவங்கி இரண்டு மாதங்களாகியும், பெரும்பாலான ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை.

* 36,000 ஏரிகள்

அரசு தகவலின்படி, மாநிலத்தில் சிறிய நீர்ப்பாசன துறையாலும் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளால் நிர்வகிக்கப்படும், 36,000 ஏரிகளில், 584 ஏரிகள் மட்டுமே 100 சதவீதம் நிரம்பி உள்ளன.

வழக்கமாக ஜூலை இறுதிக்குள், ஏறக்குறைய அனைத்து ஏரிகளிலும், 30 சதவீதம் தண்ணீர் இருக்கும். ஆனால், ஜூலை 18ம் தேதி நிலவரப்படி, சிறிய நீர்ப்பாசனம், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் உள்ள 36,202 ஏரிகளில், 5,862 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் இல்லாமல், வறண்டு போயுள்ளன.

மீதமுள்ள 13,627 ஏரிகளில், 30 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் உள்ளது. 11,170 ஏரிகளில் 31 முதல் 50 சதவீதம் வரையிலும்; 4,959 ஏரிகளில் 51 முதல் 99 சதவீதம் வரையிலும் நீர் நிரம்பி உள்ளது. மீதமுள்ள, 584 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. இதே நிலை நீடித்தால், நீர் இல்லாமல் வறண்டு போகும் ஏரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மழையில்லாததால், மாநிலத்தில் 122 தாலுகாக்களின் சில பகுதிகளில் ஏற்கனவே குடிநீர் பிரச்னை எழுந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 5,958 கிராம பஞ்சாயத்துகளில், 539 கிராம பஞ்சாயத்துகளில் தண்ணீர் பிரச்னை மோசமடைந்து உள்ளது.

* 734 கிராமங்கள்

மேலும், 112 கிராமங்களுக்கு டேங்கர்கள் மூலமாகவும்; தனியாரிடம் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் 622 கிராமங்களுக்கும் என மொத்தம் 734 கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ளும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசு மதிப்பிட்டு உள்ளது.

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 18ம் தேதி வரையிலான தகவலின்படி, மாநிலத்தின் 31 மாவட்டங்களில், ஐந்து மாவட்டங்களில் மட்டுமே இயல்பான மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

மீதமுள்ள 25 மாவட்டங்களில் மிதமான மழை பற்றாக்குறையும், ஒரு மாவட்டத்தில் கடுமையான மழை பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக, 37 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் மாநில அரசும், நீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஆழ்துளை கிணறுகளில் தொழில்நுட்ப ஆய்வு, பழுது பார்த்தல், மீண்டும் நிரப்புதல் ஆகியவற்றுக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான நிலத்தடி நீர் வறட்சி உள்ள பகுதிகளில், புதிய ஆழ்துளை கிணறுகள் தோண்டுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

வி.பி.ஜி., ராம் ஜி திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு, பல்வேறு தடுப்பணைகள் கட்டுதல், பாரம்பரிய நீர் ஆதாரங்களை புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தொழிற்சாலை, தோட்டம், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

... புல் அவுட் ...

மக்கள் ஒத்துழைப்பு

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான நிலைமையை எதிர்கொள்ள, ஒவ்வொரு குடிமகனும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, சேமிக்க வேண்டும். அரசின் இந்த மாபெரும் நீர் சேமிப்பு இயக்கத்துக்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

- ஷாலினி,

மாநில தலைமை செயலர்

*

... பாக்ஸ் ... 1

சிறிய நீர்ப்பாசனம் துறை, மாவட்ட பஞ்., நிர்வகிக்கும் ஏரிகள்

சிறிய நீர்ப்பாசனம் மாவட்ட பஞ்., மொத்தம்

வறண்ட ஏரிகள் 616 5,246 5,862

30 சதவீதம் 1,802 11,825 13,627

31 - 50 சதவீதம் 791 10,379 11,170

51 - 99 சதவீதம் 582 4,377 4,959

நிரம்பிய ஏரிகள் 22 562 584

மொத்தம் 3,813 32,389 36,202

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us