ADDED : ஆக 13, 2026 12:13 AM
- நமது நிருபர் -: தெலுங்கானாவில் நடந்த சாலை விபத்தில், தம்பதி உட்பட கர்நாடகாவை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டம், ஜாஹீராபாத் மண்டலம், சத்வார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, சரக்கு ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த, கர்நாடகாவின் பீதர் மாவட்டம், ராஜ்கிரி கிராமத்தை சேர்ந்த தேவதாஸ், 35, அவரது மனைவி நிகிதா, 30, ரேகம்மா, 36, கவிதா, 40, ஸ்ரீதேவி, 35, ரேஷ்மா, 28 ஆகிய ஆறு பேர் இறந்தனர். மேலும் ஆறு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விவசாய பணி முடிந்ததும் சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்து நடந்தது தெரிந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தரமான சிகிச்சை அளிக்க, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆறு பேர் உயிரிழப்புக்கு, கர்நாடக அரசும் இரங்கல் தெரிவித்துள்ளது.
பீதர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே, ''ஆறு பேரின் குடும்பத்திற்கும், அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்,'' என அறிவித்துள்ளார்.
