பாறை சரிந்து 7 பேர் பலி எதிரொலி 52 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்
பாறை சரிந்து 7 பேர் பலி எதிரொலி 52 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்
ADDED : ஜூலை 12, 2026 11:54 PM
பெங்களூரு: பாறை சரிந்து, ஏழு தொழிலாளர்கள் பலியானதன் எதிரொலியாக, மாதப்பட்டணா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 52 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பெங்களூரின் மாகடி சாலையில் உள்ள மாதப்பட்டணா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், ஏராளமான கல்குவாரிகள் அருகருகே செயல்பட்டு வருகின்றன. கடந்த 2ம் தேதி, ஒரு கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில், ஏழு தொழிலாளர்கள் இறந்தனர். கல்குவாரியின் உரிமையாளரான பாண்டுரங்கா, பொறுப்பாளர்கள் லோகேஷ், ராஜு கைது செய்யப்பட்டனர்.
விழித்து கொண்ட பெங்களூரு மாவட்ட கனிம மற்றும் சுரங்க துறை அதிகாரிகள், மாதப்பட்டணா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்த ஆய்வின் போது அனுமதிக்கப்பட்ட அளவை விட, கல்குவாரிகளில் அதிக ஆழத்திற்கு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்றும் தெரிந்தது. இதையடுத்து ஏழு பேர் உயிரை காவு வாங்கிய பசவேஸ்வரா கிரஷர் கல்குவாரி உட்பட, 52 கல்குவாரிகளை தற்காலிகமாக மூடி, கனிம மற்றும் சுரங்க துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பாறைகள் உருண்டு விழுந்ததில் படுகாயம் அடைந்த, ஐந்து பேரில், இருவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், மற்ற 3 பேருக்கும் இன்னும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். 'எங்களை பார்க்க வர கூட குடும்பத்தினரிடம் பணம் இல்லை; எங்களுக்கு கர்நாடக அரசு உதவ வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
