/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' குறித்து வழிகாட்டும் 83 வயது முதியவர்
/
மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' குறித்து வழிகாட்டும் 83 வயது முதியவர்
மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' குறித்து வழிகாட்டும் 83 வயது முதியவர்
மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' குறித்து வழிகாட்டும் 83 வயது முதியவர்
ADDED : அக் 25, 2025 10:57 PM

அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்கள் மிச்ச காலத்தை ஓய்வில் கழிக்கவே விரும்புவர். ஆனால் சிலர் மட்டுமே, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றனர்; மற்றவர்களுக்கு தொண்டு செய்கின்றனர்.
பொதுவாக 60 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், வீட்டில் தங்களின் பேரன், பேத்திகளுடன் விளையாடி மகிழ்ச்சியாக பொழுது போக்குவது சகஜம். பூங்காவில் நடை பயிற்சி, நண்பர்களுடன் அரட்டை, பழைய நினைவுகளை அசை போட்டு வாழ்க்கையை கழிப்பர். ஆனால் ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்ற நாராயண் நாயக், 83, மற்றவருக்கு முன் மாதிரியாக வாழ்க்கை நடத்துகிறார். மாணவர்களின் கல்விக்காக நற்பணி செய்கிறார்.
300 கல்வி நிறுவனங்கள் நாராயண நாயக், தட்சிணகன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவின் சித்தகட்டே கிராமத்தை சேர்ந்தவர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்காலர் ஷிப் என்பது, மிகவும் முக்கியமானதாகும். ஆனால் பல மாணவர்களுக்கு ஸ்காலர் ஷிப்பை எப்படி பெறுவது என, தெரிவதில்லை.
இது போன்ற மாணவர்களுக்கு நாராயண நாயக் தேவையான தகவ ல்களை கூறி வழிகாட்டுகிறார். பணம் இல்லை என்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்ற காரணத்தால், பள்ளிகளுக்கு சென்று தகவல் கூறுகிறார்.
ஆண்டு தோறும் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை தொடர்பு கொண்டு, ஸ்காலர் ஷிப் பெறும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
இவரது சேவையால் பல மாணவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் ஸ்காலர் ஷிப் பெற்றுள்ளனர். வாழ்க்கையில் தான் அனுபவித்த கஷ்டங்களை, மற்றவர் அனுபவிக்கக் கூடாது என்பதை மனதில் கொண்டு 83 வயதிலும் இச்சேவையை அவர் செய்து வருகிறார்.
ஒவ்வொரு கல்லுாரியாக சென்று, முதல்வர்களின் அனுமதி பெற்று மாணவர்களை சந்திக்கிறார். பல்வேறு ஸ்காலர்ஷிப்கள் குறித்து விவரிக்கிறார். இதற்கு எப்படி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்தும் கற்று தருகிறார். இது மாணவர்களுக்கு பெரிதும் பயன் அளித்துள்ளது. இவரை மாணவர்கள் கடவுளாக பார்க்கின்றனர்.
இது குறித்து நாராயண நாயக் கூறியதாவது:
ஆசிரியர் பணியில் இருந்து நான் ஓய்வு பெற்று 24 ஆண்டுளாகின்றன. தற்போது எனக்கு 83 வயதாகிறது. இரண்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஸ்காலர்ஷிப் குறித்து மாணவர்களுக்கு தேவையான தகவல் தெரிவிக்கிறேன்.
தனியார் கல்லுாரிகள் குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு செல்கிறேன். ஏன் என்றால் அரசு பள்ளிகளில், ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர்.
இவர்களுக்கு ஸ்காலர் ஷிப் குறித்து சரியாக தெரிவது இல்லை. பணம் இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர். ஸ்காலர்ஷிப் கிடைத்தால், அவர்களின் கல்விக்கு உதவியாக இருக்கும். தனியார் கல்லுாரிகளுக்கும் அவ்வப்போது செல்கிறேன்.
என் வாழ்க்கையில் கல்விக்காக, நான் பல கஷ்டங்களை சந்தித்தேன். நான் ஐந்தாம் வகுப்பு சென்ற போது, என் தந்தையிடம் பணம் இல்லாததால், என்னை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. நான் சாப்பிடாமல் இருந்து, என் தந்தையை பணிய வைத்து, பள்ளிக்கு சென்றேன். எட்டாம் வகுப்புக்கு வந்த போதும், இதே பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் சாப்பிடாமல் இருந்து, பள்ளிக்கு சென்றேன்.
ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்தபோது, தினமும் 8 கி.மீ., வெறுங்காலில் நடந்து பள்ளிக்கு சென்றேன். என் கஷ்டம் அத்தோடு முடியவில்லை. பல சவால்களை கடந்து கன்னடா எம்.ஏ., ஹிந்தி எம்.ஏ., பி.எட்., முடித்தேன். பிரைமரி பள்ளியில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பின், உயர் நிலைப்பள்ளிக்கு வந்தேன். தலைமை ஆசிரியராக பணியாற்றினேன். அதன் பின் ஸ்கூல் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
ஓய்வு பெறுவதற்கு முன், விடுமுறை நாட்களில் அந்தந்த கல்லுாரிகளுக்கு சென்று, ஸ்காலர்ஷிப் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
ஓய்வுக்கு பின் முழு நேரமாக இதை செய்கிறேன். பி.யு.சி., கல்லுாரி, பட்டப்படிப்பு, பி.எட்., கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,க்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் செல்கிறேன். இதனால் உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்டங்களின் பல்வேறு கல்லுாரி மாணவர்கள், விண்ணப்பம் தாக்கல் செய்து, ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

