‘ரேஸ்கோர்ஸ்’ சாலையில் ‘ஒயிட் டாப்பிங்’ பணி வாகன போக்குவரத்துக்கு 60 நாள் தடை
‘ரேஸ்கோர்ஸ்’ சாலையில் ‘ஒயிட் டாப்பிங்’ பணி வாகன போக்குவரத்துக்கு 60 நாள் தடை
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:54 PM
பெங்களூரு: பெங்களூரின் ரேஸ்கோர்ஸ் சாலையில், ‘ஒயிட் டாப்பிங்’ பணிகள் நடப்பதால், அக்டோபர் 5 முதல் அடுத்த 60 நாட்களுக்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின் முக்கியமான சாலைகளில் ஒன்றான, ரேஸ்கோர்ஸ் சாலையில் மவுர்யா சந்திப்பில் இருந்து ஹரேகிருஷ்ணா சாலை வரை, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சார்பில் ஒயிட் பணிகள் நடக்கின்றன. எனவே பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இந்த சாலையில் அக்டோபர் 5 முதல் அடுத்த 60 நாட்கள் வரை, வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன பயணியர் மாற்று பாதைகளை பயன்படுத்த வேண்டும்.
சிவானந்தா சந்திப்பில் இருந்து, மவுர்யா சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள், டிரைலைட் சந்திப்பில் இருந்து, மவுர்யா சந்திப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாங்கே சாலையில் இருந்து கே.ஆர்.மார்க்கெட்டுக்கு செல்லும் பி.எம்.டி.சி., பஸ்கள், தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் வின்ட்சர் மேனர் வழியாக சென்று, எல்.ஆர்.டி.இ., சந்திப்புக்கு சென்று, வலது புறமாக திரும்பி பசவேஸ்வரா சந்திப்பு வழியாக, முன்னோக்கி செல்லலாம்.
மெஜஸ்டிக்கை நோக்கி செல்லும் வாகனங்கள், சாங்கே சாலையில் இருந்து, குமார கிருபா சாலை வழியாக, சிவானந்தா சதுக்கத்தை அடைந்து, வலது புறம் திரும்பி எஸ்.சி., சாலைக்கு வந்து முன்னோக்கி செல்லலாம். பழைய ஜெ.டி.எஸ்., சந்திப்பில் இருந்து, டிரைலைட் சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள், ரேஸ்வியூ சந்திப்பில் இடது புறம் திரும்பி, குமாரகிருபா சாலை வழியாக சிவானந்தா சதுக்கத்தை அடையலாம்.
டிரைலைட் சந்திப்பில் இருந்து, மவுர்யா சந்திப்புக்கு செல்லும் வாகன ஓட்டிகள், சிவானந்தா மேம்பாலத்தை பயன்படுத்தி, நேரு சதுக்கம் மூலமாக எஸ்.சி., சாலையை அடைந்து, மெஜஸ்டிக் செல்லலாம். வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசாரின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
