UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:54 PM

– நமது நிருபர் –
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள சூரிய நாராயணர் கோவிலும் ஒன்றாகும். இது, பக்தர்களை வெகுவாக ஈர்க்கிறது.
பெங்களூரின் தொம்மலுாரின் கிருஷ்ண ரெட்டி காலனியில் சூரிய நாராயணர் கோவில் உள்ளது. சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அற்புதமான, அழகான கோவிலாகும். கடந்த 1995ல் படேல் கிருஷ்ண ரெட்டி, இக்கோவிலை கட்டினார். துமகூரின் சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகள், கோவிலை திறந்து வைத்தார்.
கோவில் முழுதும் கிரானைட் கற்களால் சோழர் காலத்து பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பக்தர்களை வெகுவாக கவர்கின்றன. மூலஸ்தானத்தில் உள்ள 3.25 அடி உயரமான சூரிய நாராயணர் விக்ரகம், பத்ரிநாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது; பார்க்க இரண்டு கண்கள் போதாது.
தினமும் பூஜைகள் நடக்கின்றன. ஞாயிற்று கிழமை சூரியனுக்கு உகந்தது என்பதால், மாநிலத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ரதசப்தமி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். சூரிய பகவானுக்கு கிரகங்களின் தோஷங்களை போக்கும் சக்தி உள்ளது. எனவே இந்த கோவிலுக்கு வந்து, தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர். கடன் தொல்லை நீங்கும். வாழ்க்கையில் பிரச்னைகள் விலகி, மகிழ்ச்சி பூக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். கோவிலை பற்றி கேள்விப்பட்டு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
எப்படி செல்வது?
மெஜஸ்டிக்கில் இருந்து 8 கி.மீ., மல்லேஸ்வரத்தில் இருந்து 11 கி.மீ., யஷ்வந்த்பூரில் இருந்து, 12 கி.மீ., சிவாஜிநகரில் இருந்து 6 கி.மீ., இந்திராநகரில் இருந்து 2 கி.மீ., தொலைவில் தொம்மலுார் உள்ளது. பெங்களூரின் அனைத்து இடங்களில் இருந்தும், தொம்மலுாருக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள், வாடகை வாகனங்கள் வசதியும் உள்ளது. எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும், வாடகை கார், ஆட்டோவில் சூரிய நாராயண சுவாமி கோவிலுக்கு செல்லலாம்.
l தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
l அருகில் உள்ள கோவில்கள்: வெங்கடேஸ்வரா கோவில், சோமேஸ்வரர் கோவில், சொக்கநாத சுவாமி கோவில், நாகவள்ளி கோவில், ஷீரடி சாய்பாபா கோவில்.
