/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தைகளுக்கான நுாலகம் நடத்தும் பெண் பொறியாளர்
/
குழந்தைகளுக்கான நுாலகம் நடத்தும் பெண் பொறியாளர்
ADDED : அக் 12, 2025 10:14 PM

குழந்தைகள் புத்தகங்கள் படிக்க வேண்டுமென்பதில் நாட்டம் கொள்ள வேண்டும் என்பதற்காக பெங்களூரு மல்லேஸ்பாளையாவில் 2008ல் துவங்கிய குழந்தைகளுக்கான நுாலகம், 17 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கமாக வீடு வாங்கவோ அல்லது வாடகைக்கு வீடு பார்ப்பவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் உட்பட அடிப்படை வசதிகள் உள்ளதா என்றே பார்ப்பர். ஆனால், வீட்டின் அருகில் குழந்தைகளுக்கான நுாலகம் இருக்கிறதா என்பதை யாரும் கவனிப்பதில்லை.
ஆனால், பெங்களூரு மல்லேஸ்பாளையாவின் ஆனந்தராவ் சதுக்கம் அருகில், 'திங்க் பாக்ஸ் குழந்தைகள் நுாலகம்' இயங்கி வருகிறது. இங்கு தினமும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை அழைத்து வருகின்றனர். இந்த நுாலகத்தை குஜராத்தை சேர்ந்த பக்தி ஷா, 55, என்ற பெண்மணி, 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
வெளிநாடு பொறியாளரான இவர், பணி விஷயமாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தியாவில் பள்ளிகள், கல்லுாரி மாணவர்களுக்கான நுாலகத்தை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட பக்தி ஷாவுக்கு, வெளிநாடுகளில் ஆறேழு மாடி கொண்ட கட்டடத்தில், 'குழந்தைகளுக்கான நுாலகம்' அமைந்திருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
திருமணத்துக்கு பின், பெங்களூரில் குடியேறிய இவர், குழந்தைகளுக்கான நுாலகம் குறித்து கூறியதாவது:
புத்தகம் படிக்கும் பழக்கம், எனக்கு 19 வயதில் தோன்றியது. இதன் மீதான ஆர்வம், எனக்கு பயனுள்ளதாக இருந்ததை உணர்ந்தேன். பொறியியல் கல்லுாரி படிப்பு முடிந்ததும், வெளிநாடுகளில் வேலைக்கு சென்றேன். அங்கு குழந்தைகளுக்கான நுாலகம் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. திருமணத்திற்கு பின், என் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தேன். திருமணத்துக்கு பின், என் மகனுக்கு 3 வயது இருக்கும் போதே, என் மடியில் அமர வைத்து புத்தகம் வாசித்து காண்பிப்பேன்.
பிரிட்டிஷ் கவுன்சில் அதன் பின், ஆனந்தராவ் சதுக்கம் அருகில் பிரிட்டிஷ் கவுன்சில் நுாலகத்திற்கு அழைத்து சென்று வந்தேன். குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரம் நுாலகத்தில் அமர்ந்து, மகனுக்கு பிடித்த புத்தகத்தை எடுத்து, வாசித்து காண்பித்தேன்.
பள்ளியின் நேரம் மாற்றப்பட்டதால், நானே நுாலகத்துக்கு சென்று புத்தகங்களை எடுத்து வந்து கொடுப்பேன். இதில், மகனுக்கு ஆர்வம் இல்லை. இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது தான், வெளிநாடுகளில் குழந்தைகளுக்கான நுாலகம் பார்த்தது நினைவுக்கு வந்தது.
இது போன்று பெங்களூரிலும் நுாலகம் திறக்க வேண்டும் என்று 2005ல் யோசித்தேன். அதேவேளையில், இந்த முயற்சி வெற்றி பெறுமா என்று அச்சமும் இருந்தது. இது தொடர்பாக பல நாட்கள் ஆலோசித்து, என் கணவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். அவர்களும் என் எண்ணத்துக்கு ஊக்கம் அளித்தனர்.
'திங்க் பாக்ஸ்' இதையடுத்து, பெங்களூரு மல்லேஸ்பாளையாவில் 2008ல், 'திங்க் பாக்ஸ்' என்ற பெயரில் குழந்தைகள் நுாலகத்தை, 500 புத்தகங்களுடன் துவக்கினேன். குழந்தைகளுக்கு பிடித்தமான சூழ்நிலையை உருவாக்கினால், அதுவே அவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும். அதற்கு ஏற்றபடி, 100 சதுர அடி கட்டடத்தில், விளையாட்டு சாமான்கள், மேஜைகள், சுவர் வண்ணங்கள் என அனைத்தும் பார்த்து பார்த்து வடிவமைத்தேன்.
குறிப்பாக, குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், அவர்களாக புத்தகங்களை தேர்வு செய்வதில்லை. குழந்தைகளே தங்களுக்கு பிடித்த புத்தகங்களை எடுத்து படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
கட்டணம் எவ்வளவு? ஆரம்பத்தில் 1 முதல் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக, 500 புத்தகங்கள், 200 விளையாட்டு பொருட்கள் இருந்தன. தற்போது, 10,000 புத்தகங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள் உள்ளன.
இந்த நுாலகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், வேறு இடத்துக்கு சென்றாலும் கூட, எனக்கு போன் செய்து, இதுபோன்ற நுாலகம் வேறு எங்குமே இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.
குழந்தைகளுக்கு பிடித்தமான புத்தகங்களை தேர்வு செய்ய, நானே நேரடியாக புத்தக வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்களின் குடோன்களுக்கு சென்று புத்தகங்களை பார்வையிடுவேன். அதன் பின்னரே, அதனை ஆர்டர் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நுாலகத்தில் இருந்து 2 கி.மீ., சுற்றளவில் உள்ள மக்களுக்கு, ஆர்டரின் பேரில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை புத்தகங்கள் டெலிவரி செய்யப்படுகிறது. இதில் உறுப்பினர்களாக சேர, 599 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாதத்துக்கு மூன்று புத்தகங்கள் என்றால், மாதந்தோறும் 700 ரூபாயும்; அதற்கு டிபாசிட்டாக 1,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.
அதுபோன்று, இரண்டு புத்தகங்கள், மூன்று விளையாட்டு பொருட்கள்; மூன்று புத்தகங்கள் ஒரு விளையாட்டு பொருள்; 10 புத்தகங்கள் என வாங்கும் பட்சத்தில் அதற்கேற்றவாறு மாத வாடகையும், டிபாசிட் தொகையும் செலுத்த வேண்டும்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை; மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஞாயிற்று கிழமைகளில் காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை திறந்திருக்கும்.
மேலும் விபரங்களுக்கு, 97428 49955 என்ற மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -