/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 கால்களும் செயலிழந்தவருக்கு வாழ்வளிக்கும் சக்கர நாற்காலி
/
2 கால்களும் செயலிழந்தவருக்கு வாழ்வளிக்கும் சக்கர நாற்காலி
2 கால்களும் செயலிழந்தவருக்கு வாழ்வளிக்கும் சக்கர நாற்காலி
2 கால்களும் செயலிழந்தவருக்கு வாழ்வளிக்கும் சக்கர நாற்காலி
ADDED : மே 10, 2025 11:38 PM

வாழ்க்கை என்பது புரியாத புதிர். யாருடைய வாழ்க்கையை விதி, எப்போது, எப்படி புரட்டி போடும் என்பதே தெரியாது. விதியின் விளையாட்டால் பலரின் வாழ்க்கை நிலை குலைகிறது. கிருஷ்ணா வெங்கப்பா லமானியின் வாழ்க்கையும் பாதிப்படைந்தது. கால்களை இழந்த அவருக்கு சக்கர நாற்காலி மறு வாழ்வு அளித்துள்ளது.
பெலகாவி மாவட்டம், ராமதுர்கா தாலுகாவின் சன்னாபுரா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா வெங்கப்பா லமானி, 34. ஐ.டி.ஐ., கோர்ஸ் முடித்த இவர், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாமல், இயல்பாக சென்று கொண்டிருந்தது. 2016ல் அவர் பயணித்த ஆட்டோ விபத்துக்கு உள்ளாகி, அவரது முதுகெலும்பில் அடிபட்டது. இரண்டு கால்களும் செயல் இழந்தன. எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆறாத காயங்கள்
ஆண்டுக்கணக்கில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. தொடர்ந்து படுக்கையில் இருந்ததால், உடல் உபாதைகள் வாட்டி வதைத்தன. காயங்கள் ஆறவில்லை; மன அழுத்தத்துக்கு ஆளாகி வாழ்க்கை மீதான பிடிப்பை இழந்தார். எப்படி வாழ்வது என, தெரியாமல் தவித்தார். அப்போது 'தி அசோசியேஷன் ஆப் பீப்பிள் வித் டிசெபிலிடி' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, கிருஷ்ணாவின் உதவிக்கு வந்தது.
இந்த அமைப்பினர் இவருக்கு தைரியமூட்டி, தன்னம்பிக்கையை ஏற்படுத்தினர். சிலரின் உதவியுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். செல்கோ அறக்கட்டளை அமைப்பினர், அவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கினர்.
இந்த சக்கர நாற்காலி அவரது வாழ்க்கையின் அங்கமானது. இதன் உதவியுடன் தனியார் நிறுவனத்தில், பணியில் சேர்ந்து கொண்டார்.
முன் உதாரணம்
கடந்த எட்டு மாதங்களாக, ஹோட்டல்களில் இருந்து உணவு கொண்டு சென்று, வீடு வீடாக வினியோகிக்கிறார். இதிலேயே ஊர் முழுதும் சுற்றி வருகிறார். மனதை திடப்படுத்திகொண்டு குடும்பத்துக்காக வாழ்கிறார். மற்றவருக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்.
இது தொடர்பாக கிருஷ்ணா கூறியதாவது:
கூலி வேலை செய்து வந்த என் தந்தை, தற்போது வீட்டிலேயே இருக்கிறார். என் குடும்பத்தினர் காவலாளியாக பணியாற்றும் இடத்தில், சிறு அறையில் வசிக்கிறோம். குஜராத்தில் நடந்த விபத்தில், என் சகோதரன் இறந்து விட்டார். என் மருத்துவ சிகிச்சைக்கு, அதிக பணம் செலவானது.
குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை நான் ஏற்று கொண்டேன். தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும்; மதியம் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் 'புட் டெலிவரி' வேலை செய்கிறேன். இதில் சொற்ப வருவாய் கிடைக்கிறது.
மாதந்தோறும் 1,400 ரூபாய் மாற்றத்திறனாளி உதவித்தொகை வருகிறது. இதை வைத்து வாழ்க்கை நடத்துகிறோம்.
எப்படிப்பட்டவராக இருந்தாலும், வாழ்க்கையில் கஷ்டம் வந்தே தீரும். இதை பார்த்து மனம் தளராமல், எதிர்த்து போராடினால் வாழும் வாழ்க்கையில் அர்த்தம் இருக்கும். மாநில அரசு எங்கள் சூழ்நிலையை கண்டு, சொந்தமாக வீடு கட்டி கொடுத்தால் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.