/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புற்றுநோயில் இருந்து மீண்டு ஏழைகளுக்கு சேவை செய்யும் பெண்
/
புற்றுநோயில் இருந்து மீண்டு ஏழைகளுக்கு சேவை செய்யும் பெண்
புற்றுநோயில் இருந்து மீண்டு ஏழைகளுக்கு சேவை செய்யும் பெண்
புற்றுநோயில் இருந்து மீண்டு ஏழைகளுக்கு சேவை செய்யும் பெண்
ADDED : நவ 03, 2025 04:59 AM

மங்களூரை சேர்ந்தவர் கொரினா ரஸ்கின், 62. 'வெள்ளை புறாக்கள்' என்ற பெயரில் சமூக சேவை அமைப்பை நடத்துகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்து ஏழைகளுக்கு சேவை செய்து வருகிறார்.
இதுபற்றி கொரினா ரஸ்கின் கூறியதாவது:
எனக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. பல காலங்களுக்கு பிறகு குழந்தை பிறந்தது. அதன்பின் சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று தோன்றியது. கடந்த 1993 முதல் தெருவோர பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
தெருவில் சுற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கிறேன். சிகிச்சை முடிந்து குணம் அடைந்தவர்களை, அவர்களது குடும்பத்தினருடன் இணைத்து உள்ளேன். தெருவோர பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு தினமும் உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறேன். கடந்த 2019ல் வெள்ளை புறாக்கள் என்ற பெயரில் சமூக சேவை அமைப்பை துவங்கி, அந்த அமைப்பின் மூலம், ஏழை மக்களுக்கு உதவி செய்கிறேன்.
கடந்த 2010ம் ஆண்டு எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எனது உடல்நிலை மோசம் அடைந்தது. நான் இறந்து விடுவேன் என்றே, குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் சமூக சேவையை செய்ய வேண்டும் என்று மனதில் ஓடி கொண்டிருந்த எண்ணம், என்னை உயிர் பிழைக்க வைத்தது.
கடந்த 2023ல் எலும்பு புற்றுநோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதற்கும் சிகிச்சை பெற்றேன். கடந்த ஆண்டு முழுமையாக குணம் அடைந்தேன். எனது உடலில் பல பிரச்னைகள் இருந்தாலும், ஏழைகளுக்கு சேவை செய்வதை நிறுத்தவே கூடாது என்று நினைத்து இருக்கிறேன்.
ஏழை மக்கள், என்னை அம்மா என்று கூறும் போது கண்ணீர் பொங்குகிறது. எனது சேவையை அங்கீகரித்து கர்நாடக அரசு 2025ம் ஆண்டிற்கான ராஜ்யோத்சவா விருது வழங்கி உள்ளது. இதை எனக்கு மட்டுமல்ல, அனைத்து ஏழைகளுக்கு கிடைத்த கவுரவமாக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

