/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராணுவ அதிகாரியான இளம் காங்கிரஸ் தலைவி பவ்யா
/
ராணுவ அதிகாரியான இளம் காங்கிரஸ் தலைவி பவ்யா
ADDED : நவ 03, 2025 05:00 AM

காங்கிரசின் இளம் தலைவி பவ்யா நரசிம்ம மூர்த்தி, இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து, கர்நாடகாவுக்கு திரும்பியுள்ளார். நாட்டுக்கு சேவையாற்ற தயாராகியுள்ளார்.
பொதுவாக அரசியல்வாதிகள் என்றால், தேர்தலில் போட்டியிட, பதவிகளில் அமரவே அதிகம் விரும்புவர். நாள் தவறாமல் ஊடகத்தினர் சந்திப்பு என்ற பெயரில், எதிர்க்கட்சியினரை வசைபாடுவர். ஆனால் காங்கிரசின் இளம் தலைவி, நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் சேர்ந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவ்யா நரசிம்ம மூர்த்தி, 35. கடந்த 2022ல் இந்திய ராணுவ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அந்த ஆண்டில் ராணுவ அதிகாரியாக தேர்ச்சி பெற்ற, ஒரே பெண் இவர்தான். அதன்பின் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் லெப்டினென்டாக நியமிக்கப்பட்டு, கர்நாடகாவுக்கு திரும்பினார்.
கடந்த மூன்று மாதங்களாக, உத்தரகண்ட் மாநிலத்தின், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சிக்கு சென்றார். இங்கு கடினமான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த அகாடமியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்றனர். மகளிர் அதிகாரிகள் சென்னை, கயா உட்பட மற்ற இடங்களில் பயிற்சிக்கு செல்வர். இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமை, பவ்யா நரசிம்ம மூர்த்திக்கு கிடைத்துள்ளது. அரசியலுடன், ராணுவ அதிகாரியாகவும் பணியை தொடர்வார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:
டேராடூனின் இந்திய ராணுவ அகாடமியில், பயிற்சிகள் மிகவும் கடினமாக, சிக்கலாக இருந்தன என்றாலும், அவைகள் என் வாழ்க்கையில் அபூர்வமான நொடிகளாக இருந்தன. என் உடலையும், மனதையும் வலுப்படுத்துவதில் பயிற்சிகள் முக்கிய பங்கு வகித்தன.
இந்திய ராணுவத்தில் லெப்டினென்டாக நியமிக்கப்பட்ட நான், ஆண்டு தோறும் சில மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றுகிறேன். நடப்பாண்டு மூன்று மாதங்கள் டேராடூனில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து கொண்டு, கர்நாடகாவுக்கு திரும்பினேன். இனி பணியை தொடர்வேன்.
ராணுவ அதிகாரியாகவும், அரசியல்வாதியாகவும் தாய் நாட்டுக்கு சேவை செய்ய கடவுள் என்னை ஆசிர்வதித்தது, என் அதிர்ஷ்டமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

