ADDED : ஆக 05, 2026 11:10 PM
பெலகாவி: ராகவேந்திர சுவாமி கோவில் உண்டியலில், இளைஞர் ஒருவரின் காதல் கடிதம் இருப்பதை கண்டு, கோவில் ஊழியர்கள் வியப்படைந்தனர்.
பெலகாவி மாவட்டம், ராமதுர்கா தாலுகாவில் பிரசித்தி பெற்ற ராகவேந்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புடன், உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பணத்துடன் பக்தர்கள் எழுதி போட்டிருந்த வேண்டுதல் கடிதங்களும் இருந்தன.
இந்த கடிதங்களில், இளைஞர் ஒருவரின் கடிதத்தை படித்த போது, ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
விநாயகர் மந்திரத்துடன் கடிதத்தை துவக்கியுள்ள அந்த இளைஞர், 'நான் காதலிக்கும் பெண்ணால், பல கஷ்டங்களை அனுபவிக்கிறேன். அந்த பெண்ணிடம் இருந்து என்னை, நீ தான் காப்பாற்ற வேண்டும். ராகவேந்திரர் என்னுடன் இருப்பார் என, நம்புகிறேன். எனவே, என் கஷ்டத்தை கூறி, கடிதம் எழுதுகிறேன். காப்பாற்று ராகவேந்திரா' என எழுதி இருந்தார்.
பொதுவாக, பக்தர்கள் தங்கள் வாழ்க்கையின் கஷ்டங்கள் நீங்க வேண்டும்; கடன் தொல்லை தீர வேண்டும்; திருமணமாக வேண்டும் என, பல விதமான வேண்டுதல் வைப்பது வழக்கம். ஆனால் அந்த இளைஞர், ஒரு பெண்ணிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படி, கடவுளிடம் வேண்டியிருப்பதை பார்த்து, கோவில் ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
அவரது பெயர் உட்பட, எந்த தகவல்களும் கடிதத்தில் குறிப்பிடவில்லை.
இளைஞரின் கடிதத்தை, ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
