/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலித் பெண்கள் குறித்து அவதுாறு எத்னால் மீது நடவடிக்கைக்கு தடை
/
தலித் பெண்கள் குறித்து அவதுாறு எத்னால் மீது நடவடிக்கைக்கு தடை
தலித் பெண்கள் குறித்து அவதுாறு எத்னால் மீது நடவடிக்கைக்கு தடை
தலித் பெண்கள் குறித்து அவதுாறு எத்னால் மீது நடவடிக்கைக்கு தடை
ADDED : செப் 18, 2025 07:44 AM
பெங்களூரு : 'தசராவை தலித் பெண் கூட துவக்கி வைக்க முடியாது' என கூறியதற்காக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைசூரு தசராவை புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டாக் துவக்கி வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னால், 'தசராவின் போது சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே சாமுண்டி தேவிக்கு மலர்கள் செலுத்த வேண்டும். தலித் பெண்கள் கூட அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிராக, தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் மல்லிகார்ஜுன பூஜார், கொப்பால் நகர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதில், 'பொது வெளியில் இதுபோன்ற அறிக்கை வெளியிட்டு தலித் சமூகத்தை அவமதித்துள்ளார். அவர் தொடர்ந்து ஆட்சேபனைக்கு உரிய வகையிலும், வகுப்புவாத மோதலை ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எத்னால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதி அருண் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் எத்னால் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ''எத்னாலின் அறிக்கை, திரித்து வெளியிடப்பட்டுள்ளது. தவறுதலாக இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், ''ஒரு சமூகத்தை விமர்சிக்கும் சூட்டில், மனுதாரர் ஒரு தலித் பெண்ணை அவமதித்துள்ளார். அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்று அறிக்கைகள் வெளியிடக்கூடாது,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி அருண் கூறுகையில், ''எத்னாலுக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதேவேளையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு எத்னால் ஒத்துழைக்க வேண்டும்,'' என கூறி ஒத்திவைத்தார்.