மாணவர்கள் பூணுாலை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை: கர்நாடக தேர்வு முகமை விளக்கம்
மாணவர்கள் பூணுாலை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை: கர்நாடக தேர்வு முகமை விளக்கம்
UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 10:46 PM
பெங்களூரு: ‘‘தேர்வு எழுத சென்ற மாணவர்கள் பூணுாலை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் கவனிக்கப்படும்,’’ என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கர்நாடக தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் 23ல், சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடந்தது. பெங்களூரு கோரமங்களா கிருபாநிதி கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்திற்கு தேர்வு எழுத வந்த இரண்டு மாணவர்களின் பூணுாலை தேர்வு மைய ஊழியர்கள் அகற்றினர்.
பிராமண மகாசபா
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில கர்நாடக பிராமண மகாசபா சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ‘பூணுாலை அகற்றுவது மாணவர்கள் மத உரிமைகளில் தலையிடும் செயல். இதற்கு எதிராக தெளிவான வழிகாட்டுதல்களை அரசு மற்றும் தேர்வு முகமை வெளியிட உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் அனு சிவராமன், பரத்குமார் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘மாணவர்கள் பூணுாலை பலவந்தமாக அகற்ற சொன்னது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு சுதந்திரம், கலாசார உரிமைகளை பாதிக்கும் செயல். பூணுாலை அகற்றுவது தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தேர்வு மையங்களில் மத அடையாளங்கள், ஆன்மிக பொருட்களை தவறாக கையாளாமல் இருக்க அரசு புதிய வழிகாட்டுதல் வெளியிட வேண்டும்’ என்றார்.
அறிவுறுத்தல்
கர்நாடக தேர்வு முகமை தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘தேர்வு எழுத வரும் மாணவர்கள் பூணுாலை அகற்ற வேண்டும் என்று நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேர்வு மையங்களில் நடந்த சம்பவங்கள் தேர்வு கண்காணிப்பாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் செய்த தவறுகள்.
‘தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் தடுக்க கலெக்டர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாளர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.
இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதிகள் நேற்று கூறுகையில், ‘இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று கர்நாடக தேர்வு முகமை உறுதி அளித்து இருப்பதால், இந்த விவகாரத்தில் மேலும் விசாரிக்க எதுவும் இல்லை’ என்று கூறி பொது நல மனுவை தள்ளுபடி செய்தனர்.
