மைசூரில் விமான கண்காட்சி வானிலையால் பாதியில் ரத்து
மைசூரில் விமான கண்காட்சி வானிலையால் பாதியில் ரத்து
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 06:24 PM

மோசமான வானிலையால், மைசூரில் விமான கண்காட்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதால், பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மைசூரு தசரா பண்டிகையை முன்னிட்டு, நேற்றும், இன்றும், விமான சாகச கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விமான சாகசத்தை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கும் வகையில், பன்னிமண்டபம் மைதானத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
பெங்களூ ரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை, சூர்யகிரண் ரக 9 விமானங்கள், பன்னிமண்டப மைதான வான்வெளி பகுதியில் பறந்து, இரண்டு முறை வானத்தை சுற்றி ரவுண்ட் அடித்தன. இதை பார்த்து பார்வையாளர்கள் கைதட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
மோசமான வானிலை காரணமாக, விமான கண்காட்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது என மைக் மூலம் விமானப்படை அதிகாரிகள் அறிவித்தனர். விமானங்கள் மீண்டும் எச்.ஏ.எல்., விமான நிலையத்திற்கே திரும்பின. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வானிலையை பொறுத்து, இன்று விமான சாகசம் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
