தயிர் விலையை ரூ.10 குறைத்த ‘அமுல்’ கே.எம்.எப்., உயர்த்தியதால் அதிரடி
தயிர் விலையை ரூ.10 குறைத்த ‘அமுல்’ கே.எம்.எப்., உயர்த்தியதால் அதிரடி
UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 08:54 PM
பெங்களூரு: கர்நாடகாவில் நந்தினி, தயிர் விலையை அதிகரித்துள்ள நிலையில், குஜராத்தின் அமுல் நிறுவனத்தின் தயிர் விலை 10 ரூபாய் குறைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களை இழுக்க முயற்சிக்கிறது.
கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்ந்த நந்தினி பிராண்ட் பாலின் விலை லிட்டருக்கு எட்டு முதல் 12 ரூபாயும், தயிரின் விலை 14 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
பாலின் தரம் அடிப்படையில், விலை உயர்த்தப்பட்டதாக அரசு கூறுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்த்தியதால், பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கர்நாடகாவில் பால், தயிர் விலை உயர்வு குஜராத்தின் அமுல் நிறுவனத்துக்கு, வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கர்நாடகாவில் தன் வர்த்தகத்தை விஸ்தரிக்க காத்திருந்த அந்நிறுவனம், கர்நாடகாவில் பால், தயிர் விலை உயர்ந்ததும், தன் பிராண்ட் தயிர் விலையை பத்து ரூபாய் குறைத்துள்ளது.
இதற்கு முன் 900 கிராம் பாக்கெட் தயிரின் விலை 68 ரூபாயாக இருந்தது. தற்போது 58 ரூபாயாக குறைத்துள்ளது. இது குறித்து, விளம்பரம் அளித்துள்ளது. நகர்ப்பகுதிகளிலும், ஆன்லைன் தளங்களிலும் அமுல் தயிர் கிடைக்கிறது. விலையை குறைத்ததன் மூலம், கே.எம்.எப்.,புடன் அமுல் நேரடி போட்டியில் இறங்கியுள்ளது.
அமுல் மட்டுமின்றி ‘ஹட்சன், சித்ஸ் பார்மா, கன்ட்ரி டிரைட்ஸ், மில்க் மிஸ்ட்’ போன்ற நிறுவனங்களும் கூட, தயிரின் விலையை குறைத்துள்ளன.
ஹோட்டல்கள், உணவகங்களில் தயிரின் பயன்பாடு அதிகம் என்பதால், விலை குறைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
