/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
சுற்றுச்சூழலில் ஆர்வம் காட்டும் அண்ணாதுரை
/
சுற்றுச்சூழலில் ஆர்வம் காட்டும் அண்ணாதுரை
ADDED : ஜன 11, 2026 05:41 AM

: நாம் வசிக்கும் நகரம், ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். பசுமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை, அனைவருக்கும் உண்டு. ஆனால், அதற்காக உழைப்பதில் ஆர்வம் இருக்காது. சிலருக்கு மட்டுமே, தங்களின் சுற்றுப்பகுதியை பசுமையாக வைத்திருக்க வேண்டும் என்ற, எண்ணம் இருக்கும். இதில், அண்ணாதுரையும் ஒருவர்.
செடிகள் மற்றும் தாவரங்களை விரும்பாதோர், உலகில் யாரும் இல்லை. அதேபோன்று, அண்ணாதுரைக்கும் செடிகள் என்றால் அதிக விருப்பம். சிக்கமகளூரை சேர்ந்த அண்ணாதுரை, 60. இவர், 38 ஆண்டுகளாக, தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். பெந்துாருவெல் ஜங்ஷனின் நடைபாதையில் சிறிதாக செருப்பு தைக்கும் கடை வைத்துள்ளார்.
இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் உடையவர். மங்களூரில் தொண்டு அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, சில மாதங்களுக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், செடிகள் நட்டன. இந்த நிகழ்ச்சியை கவனித்த அண்ணாதுரைக் கும், செடிகள் நட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தன் கடையின் அக்கம், பக்கத்தில் பூச்செடிகள் நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார்.
கடந்த ஐந்தாறு மாதங்களுக்கு முன் செடிகள் நட்டிருந்தார். இப்போது செழிப்பாக வளர்ந்து, பசுமையாக காட்சி அளிக்கிறது.
செடிகளை சுற்றிலும் பாதுகாப்பாக வேலி அமைத்துள்ளார். விஷமிகள் சில செடிகளை பிடுங்கி வீசினர். அதே இடத்தில் அண்ணாதுரை மீண்டும் செடிகளை நட்டு வளர்க்கிறார்.
தான் வைத்த செடிகளுக்கு மட்டு மின்றி, தன் கடை உள்ள சாலை நெடுகிலும் நடப்பட்டுள்ள செடிகளுக்கும், தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார். தொலைவில் இருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதால், செடிகள் செழிப்பாக வளர்கின்றன.
செரு ப்பு தைக்கும் வேலை செய்யும் இவர், தினமும், 200 முதல் 600 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அதில், குறிப்பிட்ட அளவு பணத்தை செடிகளை பராமரிக்க செலவிடுகிறார். உரம் வாங்கி போடுகிறார். இயற்கை மீது இவருக்குள்ள ஆர்வத்தை கண்டு, பலரும் வியக்கின்றனர். வரும் நாட்களில் மேலும் பல இடங்களில் செடிகளை நட வேண்டும் என்பது, இவரது திட்டம்.
சுற்றுச்சூழலை பாதுகா ப்பதில் இவர் மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதை, இவரது சேவை உணர்த்துகிறது.
- நமது நிருபர் -

