/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த விரைவில் செயலி
/
புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த விரைவில் செயலி
புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த விரைவில் செயலி
புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த விரைவில் செயலி
ADDED : மே 16, 2025 10:13 PM
தாவணகெரே: பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தாவணகெரே மாவட்டத்தில் சமீப காலமாக பொது இடங்களில் புகை பிடிப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், இது குறைந்தபாடில்லை.
எனவே, மாவட்ட சுகாதாரத்துறை, புகையிலை பயன்படுத்துவதை தடுக்க மொபைல் செயலி மூலம் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
இதன்படி, பொது இடங்களில் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்துவோரின் புகைப்படத்தை, செயலியில் பொது மக்களே பதிவேற்றம் செய்யலாம்.
இந்த செயலியில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் லோகேஷனுடன் பதிவேற்றப்படும். அந்த குறிப்பிட்ட லோகேஷனுக்கு அருகிலுள்ள போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்நபருக்கு அபராதம் விதிப்பார்.
ஒரு வேளை அந்நபர் அந்த இடத்தில் இல்லையெனில், சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் சென்று விசாரிப்பார்.
அப்போது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் இல்லையெனில் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயலி, கோட்பா சட்டத்தின் கீழ் செயல்படும். இதற்கு 'ஸ்டாப் டொபாக்கோ' என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த செயலியை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில் செயலி பயன்பாட்டுக்கு வரும்.