UPDATED : நவ 02, 2026 12:00 AM
ADDED : நவ 01, 2026 09:44 PM

ஹாசன்: ‘‘அரசியலில் பெண்களை, முக்கியமான முடிவுகளை எடுக்கும் பதவிகளில் அமர்த்துவதற்கு பதில், கறிவேப்பிலையை போல பயன்படுத்தி, வீசி விடுகின்றனர்,’’ என, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மோட்டம்மா குற்றம் சாட்டினார்.
ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, ஆலோசனை நடக்கிறது. பார்லிமென்டில், 33 சதவீதம் அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்யும் இந்த நேரத்தில், கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது.
அரசியலில் பெண்களை பெயரளவில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதிகாரம் அளிப்பதில் இருந்து ஒதுக்கி வைக்கின்றனர். இந்த மனப்போக்கு, அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ளது.
அரசியலில் பெண்களை கறிவேப்பிலை போல பயன்படுத்தி, வீசி விடுகின்றனர். எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, எனக்கு அமைச்சர் பதவி அளித்திருந்தார். நானும் சிறப்பாக பணியாற்றி, என் திறமையை நிரூபித்தேன்.
மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசிடம் இருந்து, மாநிலத்துக்கு அதிகமான நிதியுதவி பெற்று வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
