/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மோடி பற்றி பேசும் முன் யோசியுங்கள் கார்கேவுக்கு அசோக் அறிவுரை
/
மோடி பற்றி பேசும் முன் யோசியுங்கள் கார்கேவுக்கு அசோக் அறிவுரை
மோடி பற்றி பேசும் முன் யோசியுங்கள் கார்கேவுக்கு அசோக் அறிவுரை
மோடி பற்றி பேசும் முன் யோசியுங்கள் கார்கேவுக்கு அசோக் அறிவுரை
ADDED : ஜூலை 21, 2025 07:19 AM

பெங்களூரு : ''பிரதமர் நரேந்திர மோடியை பற்றி விமர்சித்து பேசுவதற்கு முன், அவர் நாட்டிற்காக செய்த பணிகளை யோசித்து பாருங்கள்,'' என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவுரை கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாடு முழுதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அன்பை, பிரதமர் நரேந்திர மோடி பெற்று உள்ளார். உலகளவிலும் அவருக்கு மரியாதை கிடைக்கிறது. இதனை காங்கிரசால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்து பேசுகிறார்.
சோனியா முதல் காங்கிரசின் சாதாரண தொண்டர்கள் வரை, பிரதமரை தேநீர் விற்றவர், மோசமான நபர் உட்பட பல வார்த்தைகளால் விமர்சித்து உள்ளனர். இது அக்கட்சியின் மோசமான கலாசாரத்தை காட்டுகிறது. குஜராத் முதல்வர், பிரதமர் என பல ஆண்டுகளாக மக்கள் சேவை செய்யும் மோடியை, மல்லிகார்ஜுன கார்கே விமர்சிப்பது சரியல்ல.
மூத்த அரசியல்வாதியான அவரது பேச்சு, இளம் அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மைசூரு மாநாட்டில், 'மோடி குரைக்கிறார்' என்று கார்கே விமர்சித்து உள்ளார். அவர் குரைக்கிறாரா, இல்லையா என்பது பிரச்னை இல்லை. மோடியின் தலைமையில் இந்தியா உலகளவில் கர்ஜிக்கிறது. அவரை பற்றி பேசும் முன்பு, அவர் நாட்டிற்காக செய்த பணிகளை யோசித்து பாருங்கள்.
பெங்களூரின் வளர்ச்சிக்கு என்று பட்ஜெட்டில் அறிவித்த 2,000 கோடி ரூபாய், சுரங்க பாதைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. சுரங்க பாதை எப்போது வரும் என தெரியவில்லை. ஏற்கனவே நகரில் உள்ள சாலைகள் நிலைமை படுமோசமாகி விட்டது. சுரங்கபாதையை எதிர்பார்த்து இருந்தால் அதோ கதி தான்.
மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தியதில் இருந்து, நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது. பெங்களூரு நகருக்கு பா.ஜ.,வின் பங்களிப்பு ஏராளம். காங்கிரஸ் என்ன செய்தது என்று சொல்லட்டும். அரசியலை ஒதுக்கிவிட்டு, பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.