ஆன்லைன் விளையாட்டுக்கு தடை?
பா.ஜ., - சுரேஷ்குமார் சட்டசபையில் பேசுகையில், ''ஆன்லைன் விளையாட்டு பெரிய இடையூறாக உள்ளது. போதை இல்லாத மாநிலம் போன்று, ஆன்லைன் விளையாட்டு இல்லாத மாநிலமாக மாற்றுங்கள்,'' என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ''ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டு குறித்து ஆராய்ச்சி செய்ய வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின், உரிய நடவ-டிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
புதியதாக சிறப்பு செயல்படை
பா.ஜ., - வேதவியாச காமத் பேசுகையில், ''தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்து வரும் மத கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?,'' என்று கேட்டார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ''10 - 15 ஆண்டுகளாக, தட்சிண கன்னடாவில் பல கலவரங்கள் நடந்துள்ளன. அந்த பகுதியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையை மாற்ற, தட்சிண கன்னடா, ஷிவமொகா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில், அமைதியை நிலை நாட்டுவதற்கும், மத கலவரங்களை தடுக்கவும், புதியதாக சிறப்பு செயல்படை அமைத்துள்ளது,'' என்றார்.
15 மசோதாக்கள் தாக்கல்
பல்வேறு முக்கிய விவாதங்களுக்கு இடையே, அமைச்சர்கள் பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ், கிருஷ்ண பைரேகவுடா, சந்தோஷ் லாட், சுதாகர், போசராஜ் ஆகியோர் தரப்பில், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், 15 சட்ட திருத்த மசோதாக்களை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
முனிரத்னா - சிவகுமார் வாக்குவாதம்
பா.ஜ., - முனிரத்னா சட்டசபையில் பேசுகையில், ''திட்ட அறிக்கையின்படி, மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தின் கீழ், பெட்டஹலசூரு ரயில் நிலையம் கைவிட்டிருப்பது சரியில்லை,'' என்றார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் சிவகுமார், ''உங்களுக்கு சொந்தமான நிலம் அந்த இடத்தில் உள்ளது. இதனால், அங்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும்படி வலியுறுத்துகிறீர்கள்,'' என்றார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி பேசியதால், சலசலப்பு ஏற்பட்டது.