சிறுபான்மையின வாக்காளர்களை நீக்க முயற்சி பா.ஜ., பெண் பூத் ஏஜன்ட் மீது வழக்குப்பதிவு
சிறுபான்மையின வாக்காளர்களை நீக்க முயற்சி பா.ஜ., பெண் பூத் ஏஜன்ட் மீது வழக்குப்பதிவு
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 11:52 PM

வயாலிகாவல்: மல்லேஸ்வரம் சட்டசபை தொகுதியில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த, 778 பேரை நீக்க சதி செய்ததாக பா.ஜ., பெண் பூத் ஏஜன்ட் மீது வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிந்தால் போராட்டம் நடத்துவேன் என்ற எடியூரப்பாவிற்கு சவால் விடுவது போல, பா.ஜ.,வைச் சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது, வாக்காளர் படிவம் 7ஐ விநியோகித்து, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த வாக்காளர்களை, பா.ஜ.,வினர் நீக்கியதாக முதல்வர் சிவகுமார் குற்றஞ்சாட்டினார்.
எச்சரிக்கை
இதையடுத்து, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பா.ஜ., தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை நிறுத்தக்கோரி முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., தலைவர்கள், போலீஸ் டி.ஜி.பி., சலீமிடம், நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
‘பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிந்தால், மாநிலம் முழுதும் போராட்டம் வெடிக்கும்’ என, எடியூரப்பா எச்சரித்தார்.
இந்நிலையில், மல்லேஸ்வரம் சட்டசபை தொகுதியின் வார்டு எண் 64ல், குறிப்பிட்ட சமூகத்தினர் 778 பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக்கோரி, பா.ஜ., பூத் ஏஜன்ட் வசந்தலட்சுமி படிவங்கள் சமர்பித்ததாக, பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில், காங்கிரஸ் நிர்வாகி அனுாப் புகார் அளித்தார்.
புகாரில், ‘பா.ஜ., பூத் ஏஜன்ட் வசந்தலட்சுமி, வாக்காளர் பட்டியலிலிருந்து 778 பேரை நீக்கக்கோரி போலியான தகவல்களுடன் படிவங்கள் சமர்ப்பித்தார். இந்த வாக்காளர்கள் அனைவரும் மல்லேஸ்வரத்திலேயே வசிக்கின்றனர். இருப்பினும், அவர்கள் தொகுதியில் இல்லை அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என போலியான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன. படிவங்களில் போலியான கையெழுத்துகள் போடப்பட்டன’ என கூறப்பட்டு உள்ளது.
என்ன செய்வார்?
இதையடுத்து, வசந்த லட்சுமி உட்பட இருவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். இதனால், பா.ஜ., தொண்டர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்தால், மாநிலத்தில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்த எடியூரப்பா, தற்போது என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இதே விஷயத்திற்காக, பல்லாரி மாவட்டத்தின் புரூஸ்பேட், ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையங்களில் பா.ஜ., தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை கண்டித்து, புரூஸ்பேட், ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையங்களை இன்று sமுற்றுகையிடுவோம் என மாவட்ட பா.ஜ., தெரிவித்துள்ளது.
