/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலில் துணிகர திருட்டு
/
வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலில் துணிகர திருட்டு
ADDED : ஏப் 22, 2025 05:10 AM

ராம்நகர்: வரலாற்று பிரசித்தி பெற்ற ஹாரோஹள்ளியின் சாமுண்டீஸ்வரி கோவிலில் மர்ம கும்பல், 40 கிராம் தங்க நகைகள் உட்பட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர்.
ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவின் ஹாரோஹள்ளியில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாக திருவிழா நடக்கும்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு, கோவில் திருவிழா நடந்தது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்; காணிக்கையும் செலுத்தினர். உண்டியல் நிரம்பியிருந்தது. இதை எண்ணுவதற்கு, தாலுகா நிர்வாகம் முடிவு செய்திருந்தது. உண்டியலை திறந்து பணத்தை எடுத்து பீரோவில் வைத்திருந்தனர்.
நேற்று காலையில் அர்ச்சகர் கல்யாண்குமார், பூஜை செய்ய, கோவிலுக்கு வந்தபோது திருட்டு நடந்திருப்பது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஹாரோஹள்ளி போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர்.
நேற்று முன் தினம் நள்ளிரவு, மர்ம கும்பல் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தது. அம்பாள் சிலைக்கு அணிவித்திருந்த தாலி, செயின், தங்க குண்டு உட்பட, 40 கிராம் தங்கநகைகள், நான்கு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை திருடிக்கொண்டு தப்பியோடியது தெரிய வந்தது.
திருவிழா நடந்து 20 நாட்கள் கடந்தும், உண்டியல் பணத்தை வங்கியில் செலுத்த அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இவர்களின் அலட்சியமே திருட்டுக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.