/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆட்டோ கட்டணம் உயர்வு? தங்கவயலில் ஆலோசனை!
/
ஆட்டோ கட்டணம் உயர்வு? தங்கவயலில் ஆலோசனை!
ADDED : ஏப் 11, 2025 11:18 PM

தங்கவயல்: தங்கவயலில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக் கோரி, நேற்று ஆண்டர்சன்பேட்டையில் உள்ள, 'திரி வீலர்ஸ் அசோஷியேஷன்' ஆலோசனை கூட்டம் நடந்தது.
தங்கவயலில் 3,000 ஆட்டோக்களும், 5,000 டிரைவர்களும் உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆட்டோக்களில் மீட்டர் கிடையாது.
ஒரு ஆட்டோவில் அதிக பட்சமாக நான்கு பேரும், குறைந்த பட்சம் மூன்று பேரும் பயணம் செய்கின்றனர்.
பஸ் பயணம் போலவே, ஒரு பயணியிடம் கட்டணம் வசூலிப்பது போல, ஆள் கணக்குப்படி கட்டணம் வசூலிக்கின்றனர்.
ராபர்ட்சன்பேட்டையில் இருந்து ஆண்டர்சன்பேட்டைக்கு 15 ரூபாய்; மாரிகுப்பத்திற்கு 15; - ஸ்கூல் ஆப் மைன்சுக்கு 15; உரிகம் ஸ்டேஷனுக்கு 10;- பாரண்டஹள்ளிக்கு 10; உரிகம் பேட்டைக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில் ஐந்து ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும் என்று ஆட்டோ சங்கத்திடம் டிரைவர்கள் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத் தலைவர் ஏகாம்பரம் கூறியதாவது:
பால் விலை மட்டுமல்ல டீசல், பெட்ரோல், காஸ் விலை ஏறிவிட்டது. இதுபோன்று ஒவ்வொரு பொருட்கள் மீதும் விலையேறி வருகிறது. 7 ரூபாயாக இருந்த டீ விலை 10 ரூபாயாக உயர்ந்துள்ளது. பள்ளி, கல்லுாரி கட்டணங்கள் அதிகரித்துள்ளது.
எனவே, தங்கவயலில் ஆட்டோவை நம்பியுள்ள குடும்பத்தினரும் வாழ வேண்டும். இது பற்றி தங்கவயல் மக்களிடம் விளக்கி கட்டண உயர்வுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோருகிறோம்.
பொதுமக்கள் கருத்தறிந்து, ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்து பேசி, கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.