UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 06:54 PM

சாம்ராஜ் நகர்: தீபாவளியை ஒட்டி, மலை மஹாதேஸ்வரா மலையில் நவ., 11ம் தேதி வரை மாலை 6:00 முதல் காலை 7:00 மணி வரை மலையேற்றம், பாதயாத்திரை மேற்கொள்ள கலெக்டர் தடை விதித்து உள்ளார்.
சாம்ராஜ் நகர் மாவட்டம் மலை மஹாதேவஸ்வரா மலைக்கு கடந்தாண்டு மாண்டியாவை சேர்ந்த பக்தர் ஒருவர், நடந்து மலையேறி கொண்டிருந்தார்.
அப்போது அவரை சிறுத்தை ஒன்று தாக்கி கொன்றது. சில நாட்களில், நாகமலேவில் இருந்து மஹாதேஸ்வரா மலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனையும் சிறுத்தை கொன்றது.
இதை கருத்தில் கொண்டு, பொது மக்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் ஸ்ரீ ரூபா வெளியிட்டு உள்ள அறிக்கை:
தீபாவளியை ஒட்டி, மாநிலம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மலை மஹாதேவஸ்பரா மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த நேரத்தில் வனப்பகுதியில் உள்ள விலங்குகளால் பக்தர்கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடாது என்பதற்காக, சில விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
எனவே, இன்று (நேற்று) முதல் நவ., 11ம் தேதி வரை மாலை 6:00 முதல் காலை 7:00 மணி வரை மலை மஹாதேஸ்வரா மலையில் மலையேற்றம் செய்யவோ, பாதயாத்திரை மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
