விநாயகர் சதுர்த்தி பண்டிகை பி.ஓ.பி., சிலைகளுக்கு தடை
விநாயகர் சதுர்த்தி பண்டிகை பி.ஓ.பி., சிலைகளுக்கு தடை
ADDED : ஆக 06, 2026 09:34 PM

பெங்களூரு: ''விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பி.ஓ.பி., சிலைகளை பயன்படுத்த கூடாது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்,'' என, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பெங்களூரில் துறை செயலர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பிய அறிவுறுத்தல்:
விநாயகர் மண்ணில் இருந்து பிறந்த கடவுள். நீர் வளங்களை பாதுகாக்கும் நோக்கில், கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணில் செய்யப்பட்ட கவுரி, விநாயகர் சிலைகளை வழிபடுவதற்கும், கரைப்பதற்கும் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பண்டிகை கொண்டாட்டங்களின் போது, பி.ஓ.பி., எனும் 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' வகை சிலைகளை பயன்படுத்தக்கூடாது.
இதை கட்டுப்படுத்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். இது தொடர்பாக பஞ்சாயத்து அளவில், பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
கால்சியம், சல்பேட், ஹெமிஹைட்ரேட் அடங்கிய துாளில் இருந்து செய்யப்படும் சிலைகளில் காந்தம், பாஸ்பரஸ், ஜிப்சம், மெக்னீசியம் உட்பட பல அபாயகரமான கூறுகள் உள்ளன. பாதரசம், காட்மியம், ஈயம், கார்பன் அடங்கிய ரசாயன வண்ணப்பூச்சுகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஏரிகள், கிணறுகள், ஆறுகள் உட்பட நீர்நிலைகளில் பி.ஓ.பி., சிலைகள் கரைப்பதால், அந்த நீரை பயன்படுத்தும் மக்கள், கால்நடைகள் பாதிக்கின்றன. இது, நீர்வாழ் உயிரினங்களின் இறப்புக்கு வழிவகுக்கும்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பி.ஓ.பி., சிலைகளின் உற்பத்தி, போக்குவரத்து, விற்பனைக்கு தடை விதித்து, 2023 செப்டம்பர் 15ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
