ADDED : ஜூலை 25, 2026 11:31 PM

பெங்களூரு: பெங்களூரு நகரில் சாலை ஓரத்தில் பழுதான வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை, தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையமும், போக்குவரத்து போலீசாரும், இணைந்து, கடந்த 7ம் தேதி முதல், நகரின் சாலை ஓரங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு காணப்படும் வாகனத்தின் மீது ஜி.பி.ஏ., சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும். ஏழு நாட்களுக்குள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இல்லை என்றால், இத்தகைய வாகனங்கள் இழுத்து செல்லப்பட்டு, பொது ஏலத்தில் விடப்படும். இவ்வாறு விற்கப்படும் பணம், அரசிடம் ஒப்படைக்கப்படும்.
இதுவரை, பெங்களூரின் ஐந்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இழுத்து செல்லப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களை நிறுத்த, ஐந்து மாநகராட்சிகளிடமும் தேவையான நில வசதி இல்லை.
இதனால் வாகனங்ளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்த இடம் கிடைத்தவுடன், இப்பணி மீண்டும் துவங்கும் என்று கூறப்படுகிறது.
