கஞ்சா விற்பனை செய்தவர் கைது 250 மொபைல் போன்கள் பறிமுதல்
கஞ்சா விற்பனை செய்தவர் கைது 250 மொபைல் போன்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 04, 2026 11:21 PM

பேட்ராயனபுரா: கஞ்சா விற்ற நபரின் வீட்டில், 250 மொபைல் போன்கள், கத்தி, அரிவாள், இரும்புத்தடி உட்பட 17 ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரின் சாமண்ணா கார்டனில் வசிப்பவர் அக்பர் ஷரீப், 32. இவர் ஜூலை 1ம் தேதி, இரவு 10:50 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் சுற்றி கொண்டிருந்தார்.
இதை பார்த்த ரோந்து போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் மழுப்பலாக பதிலளித்தார். அவரது பைக்கில் சோதனை நடத்திய போது, கத்தி உள்ளிட்ட ஐந்தாறு ஆயுதங்கள் காணப்பட்டன.
சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த அவரை, போலீசார் கைது செய்து, நேற்று அதிகாலை அவரது வீட்டில் சோதனை நடத்தினர். கத்தி, அரிவாள் என பல்வேறு விதமான 17 ஆயுதங்கள், 230 மொபைல் போன்கள், 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து மேற்கு மண்டல டி.சி.பி., யதீஷ் கூறியதாவது:
அக்பர் ஷரீப் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து, அவரிடம் விசாரித்தோம்.
பேட்ராயனபுரா ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்கும் போது, சிலர் தகராறு செய்கின்றனர். அவர்களிடம் இருந்து, தற்காத்து கொள்ளும் நோக்கில், ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறினார்.
மேலும், 250 மொபைல் போன்களை ஏன் வைத்திருக்கிறாய் என விசாரித்த போது, தன்னிடம் கஞ்சா வாங்கும் போது, பணம் இல்லாதவர்கள் பணத்துக்கு பதிலாக, தங்களின் மொபைல் போனை அடமானமாக கொடுத்ததாக கூறியுள்ளார். அக்பர் ஷரீப் அளித்த பதில், எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
மொபைல் போன்கள் திருடப்பட்டவையாக இருக்கலாம். எனவே அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்துகிறோம். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனின் விபரங்களை பெற, சி.சி.பி.,யின் உதவி பெறப்படுகிறது.
அக்பர் ஷரீப்பின் தாய் மெஹர் உன்னசாவும் கூட, கஞ்சா விற்றவர். 2024ல் இவரை கைது செய்த பேட்ராயனபுரா போலீசார், 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் சிறை தண்டனை அனுபவிக்கிறார். தாயை போல மகனும் கஞ்சா விற்று, கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
