குடிநீரை தவறாக பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் என எச்சரிக்கை
குடிநீரை தவறாக பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் என எச்சரிக்கை
ADDED : ஜூலை 04, 2026 11:23 PM

பெங்களூரு: ''வாகனங்களை கழுவவோ, தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சவோ குடிநீரை பயன்படுத்தினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் மஞ்சுளா தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு வருவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் உள்ள தண்ணீர் குழாய்களில், தண்ணீர் வீணாவதை தடுக்கும், 'ஏரேட்டர்' கருவிகளை கட்டாயமாக பொருத்த வேண்டும். இதை பொருத்துவதன் மூலம் 30 முதல் 50 சதவீதம் வரை நீர் வீணாவது தடுக்கப்படும்.
வாகனம் கழுவ, தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச, சாலை சுத்தம் செய்வதற்கெல்லாம் குடிநீரை பயன்படுத்தக் கூடாது. குடிப்பதற்கு தவிர மற்ற அனைத்து தேவைகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும். நீச்சல் குளங்களை நிரப்புவதற்கு குடிநீரை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவுகளை மீறுபவர்களுக்கு பெங்களூரு குடிநீர் வழங்கல், கழிவுநீர் வாரிய சட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்டவருக்கு வழங்கப்படும் நீர் வினியோகம் 50 சதவீதம் வரை குறைக்கப்படும்.
ஏற்கனவே, அபராதம் விதிக்கப்பட்ட நபர் மீண்டும் சிக்கினால், அபராத தொகையுடன் கூடுதலாக 500 ரூபாய் வசூலிக்கப்படும். சம்பந்தப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, அதை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
