மைசூரு தசரா யானை அபிமன்யு இடதுபுற தந்தம் உடைந்தது
மைசூரு தசரா யானை அபிமன்யு இடதுபுற தந்தம் உடைந்தது
ADDED : ஜூலை 04, 2026 11:26 PM

மைசூரு: பிரசித்தி பெற்ற மைசூரு தசராவில், தங்க அம்பாரி சுமக்கும் அபிமன்யு யானையின் இடது புற தந்தம் உடைந்துள்ளது.
மைசூரில் நடக்கும் தசரா விழாவில், ஜம்பு சவாரியில் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து செல்வதில், அபிமன்யு யானை பிரசித்தி பெற்றது. அம்பாரி சுமந்து மற்ற யானைகள் புடை சூழ, கம்பீரமாக நடந்து செல்லும். இதை பார்க்கவே லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர், மைசூரு வருவர்.
அம்பாரி சுமப்பதில் மட்டுமின்றி, கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடக்கி, சிறை பிடிப்பதிலும் கை தேர்ந்தது. துபாரே யானைகள் முகாமில், யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, பெண் சுற்றுலா பயணி பலியான சம்பவத்துக்கு பின், அனைத்து யானைகள் முகாம்களில், சுற்றுலா பயணியர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திகோடு யானைகள் முகாமில், மரக்கட்டைகளை இடமாற்றும் பணிக்கு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், பெரிய மரத்துண்டுகளை இடம் மாற்றும் போது, அபிமன்யு யனையின் இடது புற தந்தத்தின் நுனி உடைந்தது. இது அதிகாரிகளுக்கு வருத்தம் அளித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் இருந்து, ஜம்பு சவாரியில் அபிமன்யு தங்க அம்பாரி சுமக்கிறது. நடப்பாண்டு, 7வது முறையாக அம்பாரி சுமக்கவுள்ளது.
