மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மைசூரு தசரா அதிகாரிகளுக்கு முதல்வர் சிவகுமார் உத்தரவு
மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மைசூரு தசரா அதிகாரிகளுக்கு முதல்வர் சிவகுமார் உத்தரவு
ADDED : ஜூலை 11, 2026 04:25 AM

பெங்களூரு: ''தசரா குறித்து எழும் விமர்சனங்களும், குறைகளும் இயல்பானவை. அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு முதல்வர் சிவகுமார் அறிவுறுத்தினார்.
இந்தாண்டு நடைபெற உள்ள மைசூரு தசரா விழா தொடர்பாக, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முதல்வர் சிவகுமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
மைசூரு தசரா ஒரு வரலாற்று, பாரம்பரிய விழாவாகும். அதன் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படாமல், காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை செய்து, சர்வதேச தரத்தில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும்.
இது, நம் மாநிலத்தின் வரலாறு, கலாசாரம், பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விழாவாகும்.
சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த சூழலில், தேவையான உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
தேசிய அளவில் புகழ் பெற்ற பாடகர்கள், இசைக்கலைஞர்கள் அழைக்கப்பட்டு, மக்களுக்கு தரமான கலாசார நிகழ்ச்சிகள் வழங்க வேண்டும். அதேவேளையில் பாரம்பரியம் தொடர வேண்டும். தசரா ஏற்பாட்டு குழுவினர், அரசியல் வேறுபாடுகளை மறந்து, விழாவின் வெற்றி பெறுவதை தங்களின் முதன்மை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட நல்ல மரபுகளும், அமைப்புகளும் தொடர வேண்டும்.
தசரா குறித்து எழும் விமர்சனங்களும் குறைகளும் இயல்பானவை. அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விழாவை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் உடையார், துணை முதல்வர் பரமேஸ்வர், மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யதீந்திரா, முன்னாள் அமைச்சர் மஹாதேவப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
அக்., 18, 19ல்
கம்பாலா?
அக்., 18, 19ல் கம்பாலா விளையாட்டு நடத்த கம்பாலா குழு அனுமதி கோரி உள்ளது. கம்பாலா விளையாட்டுகளை ஏற்பாடு செய்ய, தனி மானியம் கோரப்பட்டு உள்ளது. தசராவின் ஒரு பகுதியாக கம்பாலாவை அறி முகப்படுத்துவது, கடலோர, மலை மாவட்டங்களின் கலாசாரம், பன்முகத்தன்மைக்கு ஒரு தளமாக இருக்கும் என கூறப்படுகிறது.
