நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
ADDED : ஜூலை 11, 2026 04:25 AM

பெங்களூரு: ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று ஆஜராகி ஜாமின் பெற்றார்.
கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.
பெங்களூரை சேர்ந்த வக்கீல் திலீப் குமார், ஹலசூரு கேட் போலீசில், 'நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார்' என, 2019ல் புகார் அளித்திருந்தார். இது தொ டர்பான வழக்கு, 48வது ஏ.சி.ஜே.எம்., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகும்படி பிரகாஷ் ராஜுக்கு 'சம்மன்' அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த முறை விசாரணையின்போது, அவருக்கு வெளியில் வரமுடியா த பிடி வாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று காலை வக்கீலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.
அப்போது வக்கீல், 'மனுதாரருக்கு சம்மன் அனுப்பப்பட்டதே அவருக்கு தெரியாது. அவருக்கு பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதை ஊடகங்கள் மூலமே அறிந்தார். தமிழகத்தில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார். எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பிரகாஷ் ராஜுக்கு, 4,000 ரூபாய் ரொக்க பிணை வழங்க உத்தரவிட்டு, அவருக்கு ஜாமின் வழங்கியது.
