/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பங்காருபேட்டை எம்.எல்.ஏ., முதல்வருக்கு கடிதம்
/
பங்காருபேட்டை எம்.எல்.ஏ., முதல்வருக்கு கடிதம்
ADDED : செப் 17, 2025 07:32 AM
மாலுார் : 'கோமுல்' என்ற கோலார் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழல் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு பங்காருபேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஊழல் புகார் குறித்து விரிவாக விவரித்து எம்.எல்.ஏ., கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
'கோமுல்' சங்கத்தின் பெயரில் கடன் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் சிலர், கூட்டுறவுத்துறை, லோக் ஆயுக்தா வரை புகார் செய்திருந்தனர்.
கோமுல் சங்க தலைவர் நஞ்சே கவுடா, நிர்வாக இயக்குநர் கோபால மூர்த்தி, மேலாளர் நாகேஷ் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.
தவிர, கோமுல் பணியாளர் நியமனத்திலும் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
இவை தவிர சுற்றுப்பயணம், கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் மோசடி நடந்துள்ளது.
முகாம்கள் நடத்துதல், அலுவலகங்கள், பெண்கள் விடுதி புதுப்பித்தல் ஆகியவற்றிலும் ஊழல் நடந்துள்ளது. இவற்றில் கோமுல் அதிகாரிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
இவை கடுமையான குற்றச்சாட்டுகள். எனவே பொதுநலன் கருதி ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
தவறு செய்துள்ளவர்கள் மீது சட்டவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.