சித்தராமையாவை சதீஷ் கைவிட்டார் பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றச்சாட்டு
சித்தராமையாவை சதீஷ் கைவிட்டார் பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றச்சாட்டு
ADDED : செப் 13, 2026 11:25 PM

பாகல்கோட்: சித்தாரமையாவை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்க, எம்.எல்.ஏ.,க்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தது, சதீஷ் ஜார்கிஹோளி தான், என, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றஞ்சாட்டினார்,
பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, சில தவறுகள் செய்துள்ளார். சித்தராமையாவை கை விட்டிருக்க கூடாது. சித்தராமையா, சதீஷ் ஜார்கிஹோளியை, அளவுக்கு அதிகமாக நம்பினார். எம்.பி.பாட்டீல், ஜமீர் அகமது கான் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் மூவருமே, அவரை கை விட்டுவிட்டனர்.
சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறக்குவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என, 36 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இவர்களிடம் கையெழுத்து பெற்று கொடுத்ததே, சதீஷ் ஜார்கிஹோளி தான், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்க என்ன காரணம் என்பதை, மக்களிடம் கூற வேண்டும். இவர் கட்சி மேலிடத்துக்கு, அதிகமான ரொக்கம் கொடுக்கவில்லை என்பதால், பதவியில் இருந்து இறக்கினரா என்பதை விளக்க வேண்டும்.
சித்தராமையாவுக்கு எப்படிப்பட்ட நிலை வந்துள்ளது. இப்போது எந்த அரசியல்வாதியும், இவரது வீட்டுக்கு செல்வதில்லை. சித்தராமையாவின் சாபம் தான், சதீஷ் ஜார்கிஹோளிக்கு பலித்துள்ளது.
தன்னுடையவர்களே தனக்கு துரோகம் செய்துள்ளதாக, சதீஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார். அவரை மாட்டி விடும் வேலையை செய்ய கூடியவர்கள், பா.ஜ.,வில் யாரும் இல்லை. காங்கிரசாரே இதை செய்துள்ளனர்.
ராஜண்ணா கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தவர். எதையும் வெளிப்படையாக பேசுவார். அவரது நிலை என்னவானது... நானும் கூட தவறை, தவறு என, கூறினேன். என்னையும் வெளியேற்றினர். வெளியேற்றட்டும். என்ன நடக்கிறது என, பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
