/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால்... வடியாத வெள்ளம்! ஆறாக மாறிய சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு
/
பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால்... வடியாத வெள்ளம்! ஆறாக மாறிய சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு
பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால்... வடியாத வெள்ளம்! ஆறாக மாறிய சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு
பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால்... வடியாத வெள்ளம்! ஆறாக மாறிய சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 21, 2025 02:44 AM

பெங்களூரு : பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. ஆறாக மாறிய சாலைகளால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இன்றும், நாளையும் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை குறித்து மாநில பேரிடர் மீட்பு குழு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், மாநில அரசு அலட்சியம் காட்டியதும் தெரியவந்துள்ளது. நடந்தே சென்றனர்
மத்திய மேற்கு வங்கக்கடலில், தெற்கு ஆந்திரா, தமிழகத்தின் வடமாவட்டங்கள் இடையே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கர்நாடகாவிலும் கனமழை பெய்கிறது. குறிப்பாக பெங்களூரில் மழை வெளுத்து வாங்குகிறது.
கடந்த 17, 18 ம் தேதிகளில் இரவு முழுதும் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால், நகரம் வெள்ளக்காடானது. ஹொரமாவின் சாய் லே - அவுட் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். மழைக்கு பெண் உட்பட மூன்று பேர் பலியாகினர்.
வருண பகவான்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் கனமழை இல்லாமல், மிதமான மழை பெய்தது. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். ஆனால் வருணபகவான் விடவில்லை. நேற்று அதிகாலை 5:00 மணி முதல் மழை பெய்ய துவங்கியது.
மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், பனசங்கரி, சாந்திநகர், ஜெயநகர், சாம்ராஜ்பேட், விஜயநகர், சந்திரா லே - அவுட், இந்திராநகர், கோரமங்களா, சுங்கதகட்டே, காமாட்சிபாளையா, மல்லேஸ்வரம், ஆர்.டி.நகர், ஜாலஹள்ளி, கம்மனஹள்ளி, ஜே.பி.நகர், சிவாஜிநகர் உட்பட நகர் முழுதும் கனமழை பெய்தது.
இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பெங்களூரில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறியுள்ள, வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த எச்சரிக்கை மூலம் 6.45 செ.மீ., முதல் 11.55 செ.மீ., வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. பெங்களூரில் நேற்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 நிலவரப்படி 1.35 செ.மீ., மழை பெய்து உள்ளது.
கடந்த 18 ம் தேதி இரவு பெய்த மழையால், சில்க் போர்டு சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. நேற்றும் சில்க் போர்டு பகுதியில் சிறிது நேரம் பெய்த மழையால் தண்ணீர் தேங்கியது. சில்க் போர்டு மேம்பாலத்தில் இருந்து மடிவாளாவுக்கு வரும் சாலையில், கடல் போல மழைநீர் தேங்கி நின்றது.
தண்ணீருக்குள் வாகனங்களை இயக்க பயந்து, பாலத்தின் முனையில் சிலர் வாகனங்களை நிறுத்தினர். பொம்மனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சில்க் போர்டு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பஸ்களில் வந்தவர்கள் பொறுமை இழந்து, பஸ்களில் இருந்து இறங்கி நடந்து செல்ல ஆரம்பித்தனர்.
அரசு அலட்சியம்
பெங்களூரில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தோம் என்று துணை முதல்வர் சிவகுமார் கூறி இருந்தார். ஆனால் அரசு அலட்சியம் காட்டியது தெரிந்து உள்ளது.
அதாவது, கடந்த மாதம் 15ம் தேதி மாநில பேரிடர் மீட்பு குழு வெளியிட்ட அறிக்கையில், 'மே 15ம் தேதியில் இருந்து பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
'மாநகராட்சி, போலீஸ், குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வெள்ள பாதிப்புக்கு காரணமாக மாறி உள்ளது.
3 நாள் ஆரஞ்சு அலெர்ட்
டிராக்டரில் உணவு
பயணியர் கூட்டம்
மழையில் நனைந்த மலர்கள்