/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு மாநகராட்சி துாய்மை பணியாளர்கள்... வேலை நிறுத்தம்! பணி நிரந்தரம் கோரி ஓட்டுநர்களும் ஸ்டிரைக்
/
பெங்களூரு மாநகராட்சி துாய்மை பணியாளர்கள்... வேலை நிறுத்தம்! பணி நிரந்தரம் கோரி ஓட்டுநர்களும் ஸ்டிரைக்
பெங்களூரு மாநகராட்சி துாய்மை பணியாளர்கள்... வேலை நிறுத்தம்! பணி நிரந்தரம் கோரி ஓட்டுநர்களும் ஸ்டிரைக்
பெங்களூரு மாநகராட்சி துாய்மை பணியாளர்கள்... வேலை நிறுத்தம்! பணி நிரந்தரம் கோரி ஓட்டுநர்களும் ஸ்டிரைக்
ADDED : மார் 29, 2025 06:54 AM

பெங்களூரு நகரில், 1.50 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வீடுகளில் இருந்து தினமும் குப்பை கழிவுகளை சேகரித்து, நகரை சுத்தமாக வைத்திருப்பதில் துாய்மை பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது.
பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை மையத்தின் கீழ் துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த ஊழியராகவே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பணி நிரந்தரம், ஐ.பி.டி., சலப்பா அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என பல கோரிக்கைளை மாநகராட்சியிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இது குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து, கடந்த 26ம் தேதி காலை பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிடுவதற்காக கர்மிகார சம்ரக் ஷனா அமைப்பினர் நுாற்றுக்கணக்கானோர் சென்றனர்.
கைது
ஆனால், அவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால், துாய்மை பணியாளர்கள் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது.
இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக, போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், ஓட்டுநர்களை கைது செய்தனர். இது, பணியாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்களை மண்டபத்திற்கு அழைத்து சென்று, காவலில் வைத்தனர். மாலை அனைவரையும் விடுவித்தனர்.
போராட்டம் குறித்து, கர்மிகார சம்ரக் ஷனா அமைப்பின் தலைவர் தியாகராஜ் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்த 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். எங்களது கோரிக்கைகள் நியாயமானவை.
இருப்பினும், மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை மையம் ஆகியவை தொடர்ந்து நிராகரித்து வருகின்றன. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும். நேரடி ஊதிய திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட மாட்டார்கள். மேலும், ஓட்டுநர்கள், குப்பை அள்ளும் வாகனங்களை இயக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாகனங்கள் நிறுத்தம்
இதன்படி, நேற்று முன்தினம் முதல் குப்பை வண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டனர். இதனால், பல இடங்களில் சாலைகளில் வாகனங்கள் குப்பை கழிவுகளுடன் நிற்கின்றன.
கடந்த இரண்டு நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் குப்பை அகற்றப்படவில்லை. சிட்டி மார்க்கெட், சிவாஜிநகர், கே.ஆர்., மார்க்கெட் அருகே குப்பைகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. பொது மக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த குப்பை குவியல்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றம், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, திடக்கிழவு மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், 'ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும், தற்போது பணியில் உள்ள 6,000 பேரை வைத்து, குப்பை அகற்றப்பட்டு வருகின்றன' என்றனர்.
துர்நாற்றம்
கே.ஆர்., மார்க்கெட்டில் உள்ள சாகர் நல சங்கத்தின் தலைவர் எஸ்.என்.ஆசிப் கூறுகையில், “குப்பைகள், ரசாயன கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் உட்கார்ந்து வியாபாரம் செய்ய முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் பணியாளர்களை நியமித்து, குப்பையை அகற்ற வேண்டும்,'' என்றார்.
தற்போது, இந்த போராட்டத்தால் 5,300 ஆட்டோ குப்பை வண்டிகள், 700 குப்பை லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாககுப்பை சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதால், நகரில் உள்ள பல இடங்களில் குப்பை அகற்றப்படாமல் கிடக்கின்றன. வேலை நிறுத்தம் தொடர்ந்தால், சிலிக்கான் நகரம், குப்பை நகரமாகும் அபாயம் உள்ளது.