/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு போலீசார் இரவில் சிறப்பு ரோந்து
/
பெங்களூரு போலீசார் இரவில் சிறப்பு ரோந்து
ADDED : செப் 22, 2025 03:56 AM
பெங்களூரு ; பெங்களூரில் குற்றங்களை கட்டுப்படுத்தவும் ரவுடிகளின் தொந்தரவை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போலீசார் இரவு ரோந்து நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரில் குற்றங்கள், விபத்துகள் அதிகரிக்கின்றன. ரவுடிகளால் பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், நகர போலீசார் இரவு ரோந்து பணியை துவக்கியுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை 5:00 மணி வரை போலீசார் சிறப்பு ரோந்து சுற்றினர்.
நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங்கும், ரோந்தில் பங்கேற்று இளம் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார். அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் ரோந்தில் பங்கேற்றனர். நான்கு கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், டி.சி.பி.,க்கள், அனைத்து பிரிவு உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் சிறப்பு ரோந்தில் ஈடுபட்டனர்.
நகரின் சில இடங்களில், வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள், இரு சக்கர வாகனத்தில் மூவர் சென்றது, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியவர்களை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்தனர்.
லாட்ஜ், கிளப், ஹோட்டல்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இரவு முதல் அதிகாலை வரை சிறப்பு ரோந்து நடத்தினர்.