பெங்களூரு சுரங்கப்பாதை திட்டத்தால் பயனில்லை!: கவர்னரிடம் ஐ.ஐ.எஸ்சி., குழு அறிக்கை
பெங்களூரு சுரங்கப்பாதை திட்டத்தால் பயனில்லை!: கவர்னரிடம் ஐ.ஐ.எஸ்சி., குழு அறிக்கை
ADDED : செப் 02, 2026 11:08 PM

பெங்களூரு: 'முதல்வர் சிவகுமாரின் ஹெப்பால் - சில்க் போர்டு வரையிலான சுரங்கப்பாதை திட்டத்தால் எந்த பலனும் இல்லை. அதற்கு பதிலாக, மெட்ரோ ரயிலை செயல்படுத்தினால், செலவும் குறையும்' என கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், ஐ.ஐ.எஸ்சி., நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
பெங்களூரு நகரில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதை குறைக்க, மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில், ஹெப்பால் - சில்க் போர்டு வரையிலான, 17 கி.மீ., சுரங்கப்பாதை திட்டமும் ஒன்று. இத்திட்டத்தை நிறைவேற்ற, மாநில அரசு, கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கர்நாடக அரசு பூங்காக்கள் திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.
எதிர்ப்பு இந்த சட்டத்தை அமல்படுத்தினால், பெங்களூரின் பூங்காக்களின் பசுமை பாதிக்கப்படும் என கூறி, பா.ஜ., தலைவர்கள், கடந்த வாரம், லால்பாக் பூங்காவில் நடத்திய போராட்டத்தில், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்று, அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்திட்டத்திற்கான டெண்டரில், கவுதம் அதானி குழுமம் பங்கேற்று, டெண்டரை பெற்றது. இது தொடர்பாக, கடந்த ஆக., 23ம் தேதி பெங்களூரு வந்திருந்த அதானி குழும தலைவர் கவுதம் அதானி, சதாசிவ நகரில் முதல்வர் சிவகுமாரின் இல்லத்திற்கு சென்றார்.
இருவரும் 20 நிமிடங்கள் சந்திப்புக்கு பின், கவுதம் அதானியை, தன் வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். வேறு எதுவும் இல்லை' என்று சிவகுமார் தெரிவித்தார்.
ஆனால், ஹெப்பால் - சில்க் போர்ட் சுரங்கப்பாதை பணிக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
அதே வேளையில், இத்திட்டம் தொடர்பாக, ஐ.ஐ.எஸ்சி., எனும் இந்திய அறிவியல் மையத்தின் நிலையான போக்குவரத்து ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் ஆசிஷ் வர்மா தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தினர்.
ஆய்வு அறிக்கையை, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் சமர்ப்பித்தனர்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஹெப்பால் சுரங்கப்பாதை திட்டம் போக்குவரத்து பிரச்னையை முழுமையாக தீர்க்காது. சுரங்கப்பாதையில் வாகனங்கள் நுழையும் பகுதி, வெளியேறும் பகுதிகள் அருகில் புதிய பிரச்னைகள் உருவாக கூடும்.
குறிப்பாக, ஹெப்பால் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் எஸ்டீம் மால் அருகே, புதிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வெள்ளப்பெருக்கு எஸ்டீம் மால் வெளியேறும் வாயிலுக்கு அருகில், 60 மீட்டர் வளைவு உள்ளது. இதனால் 60 கி.மீ., வேகத்தில் வரும் வாகனங்கள், இந்த இடத்தை நெருங்கும் போது, 40 கி.மீ., வாகனத்தின் வேகத்தை குறைந்ததால், வாகன நெரிசல் ஏற்படும்.
ஹெப்பால் ஏரி அருகில் சுரங்கப்பாதை அமைவதால், மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், சுரங்கப்பாதைக்குள் வெள்ளம் புகுந்துவிடும்.
சுரங்க பாதைக்கு பதில், அப்பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால், அனைத்து பிரச்னைகளும் தீரும். 2027 மற்றும் 2031ம் ஆண்டுகளின் போக்குவரத்து நிலவரத்தை ஆய்வு செய்த பின்னரே, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
சுரங்கப்பாதையால் வெள்ளப்பெருக்கு மற்றும் பல சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அத்துடன், இத்திட்டத்தால், ஒரு வாகன பயணி பயணத்திற்கான கட்டணம், ஆறு மடங்கு அதிகரிக்கும். இத்திட்டம் செயல்படுத்தினால் ஒரு வாகன பயணிக்கு 5.23 ரூபாய் செலவாகும். அதுவே, மெட்ரோ ரயில் பாதை அமைத்தால், 0.86 ரூபாய் மட்டுமே செலவாகும். எனவே, சுரங்கப்பாதைக்கு பதிலாக, மெட்ரோ ரயில் சேவை சிறந்தது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூரு, எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
மாநில வளர்ச்சி பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே, ஹெப் பால் சுரங்கப்பாதை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.
இத்திட்டம் மக்களின் நேரம், பணத்தை சேமிக்கும். தொழிலதிபர்களாகிய நீங்கள், இத்திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
பெங்களூரில் 1.4 கோடி வாகனங்கள் உள்ளன. பெங்களூரு போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்த, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, 1.5 லட்சம் கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. எனவே, மாநில வளர்ச்சி பயணத்தில் தொழிலதிபர்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
