ADDED : ஏப் 03, 2025 07:12 AM

அனுதினமும் அலுவலகம் செல்பவர்கள், தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவர். ஆனால், சுற்றுலா இடத்தை தேர்வு செய்வதிலேயே பெரும்பாலான நேரங்களில் சுற்றுலா செல்வது தடைபட்டுவிடும்.
இவர்களுக்காகவே ஒரு நாள் சுற்றுலாவாகவும் பணம் அதிகமாக செலவு செய்யாமல் சுற்றுலா செல்வதற்கும், ஒரு சிறந்த இடத்தை சுட்டிக் காட்டுகிறது இக்கட்டுரை.
உடுப்பி மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ளது ஹலடி கிராமம். கிராமத்திற்கு இலக்கணமாக கூறப்படும் மரம், செடி, கொடிகள், தூய்மையான காற்று போன்றவை இங்கும் உள்ளது.
தண்ணீர் பாலம்
இந்த கிராமத்தில், 'பாரத்கல் ஹலடி' எனும் பாலம் உள்ளது. பொதுவாக பாலம் என்றால் வாகனங்கள் செல்வதற்காகவும், மக்கள் பயன்பாட்டிற்காகவும் அமைக்கப்படும். இல்லையெனில், ரயில்கள் செல்வதற்கு கட்டப்படும்.
ஆனால், இந்த பாலம் சற்று வித்தியாசமாக தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலம் வாராஹி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டது.
கோடைக்காலத்தின் போது விவசாயிகளுக்கு ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக திட்டமிட்டு கட்டப்பட்டது.
இந்த பாலம் ஹலாடி ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ளது.
பார்க்கும் போதே பரவசத்தை ஏற்படுத்தும் விதமாய் உள்ளது. பாலத்தின் மீது ஒருவர் நடந்து செல்லும் விதமாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலத்தின் மேலிருந்து பார்க்கும் போது, கீழே ஹலாடி ஆறு வேகமாக பாய்ந்து கொண்டிருப்பதையும், சுற்றி மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியையும் உங்களால் காண முடியும்.
இந்த பாலத்திற்கு கீழே, ஆற்றின் மீது ஒரு சிறிய அளவிலான தரை பாலம் உள்ளது. இந்த பாலம் கிராம மக்கள் ஆற்றை கடப்பதற்காக பயன்படும் வகையில் உள்ளது.
இதில், கார், பைக், வாகனங்கள் போன்ற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும், சில கிராம மக்கள் சைக்கிள், பைக்குகளில் ஆற்றை கடந்து வருகின்றனர். மாலை நேரங்களில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் கூட்டம் நடந்து செல்வதை பார்க்க முடியும்.
அருமை
இந்த காட்சியை மாலை நேரங்களில், 'பாரத்கல் ஹலடி' பாலத்தில் இருந்து பார்க்கும் போது, அருமையாக இருக்கும்.
அதுமட்டுமின்றி பாலைத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பூத்து கிடக்கும் மஞ்சள் நிற பூக்கள் மேலும் அழகை கூட்டுகின்றன.
இந்த பாலத்தை அடைவதற்கு நீங்கள் நடந்து அரை கி.மீ., நடந்து செல்ல வேண்டும். அப்போது, இந்த ஒற்றையடி பாதையில் பேசிக் கொண்டே நடக்கலாம்.
இப்பட்டிப்பட்ட பாலத்தை குடும்பத்துடன் சென்று பார்வையிட்டு, ஆசை தீர புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வரலாமே.
- நமது நிருபர் -

