/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாகசத்தில் ஈடுபட்டால் பைக்குகள் பறிமுதல்
/
சாகசத்தில் ஈடுபட்டால் பைக்குகள் பறிமுதல்
ADDED : ஏப் 02, 2025 06:16 AM

பெங்களூரு : “பெங்களூரில் தொடர்ந்து பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும்,” என, போக்குவரத்து இணை கமிஷனர் கூறினார்.
பெங்களூரில் சமீப காலமாகவே பைக் சாகசங்களில் ஈடுபடுவோரின் எண்ணிகை அதிகிரித்த வண்ணம் உள்ளது. இளைஞர்கள் பைக்கில் 'வீலிங்' செய்வது போன்ற வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் உலா வருகின்றன.
இது, சக வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் கவனத்திற்கு சென்றது. அவர் பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து போலீசாரை அறிவுறுத்தினார்.
இதையடுத்து போக்குவரத்து போலீசார், கடந்த சில மாதங்களாகவே சாகசங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்கினர். கடந்த மாதம் நடத்திய சோதனையில் சிக்கியவர்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதன்படி, பைக் சாகசங்களில் ஈடுபட்டதற்காக 398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 397 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 324 பேர் கைது செய்யப்பட்டனர். 40 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 197 பைக்குகளின் ஆர்.சி., புத்தகங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சிறுவர்களுக்கு பைக் வழங்கியதற்காக 62 பெற்றோர் மீதும், 82 சிறுவர்கள் மீதும், சிறார் நீதி சட்டத்தின் கீழ் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் எம்.எம்.அனுசேத் கூறியதாவது:
பெங்களூரில் கடந்த மூன்று மாதங்களில் பைக் சாகசங்களில் ஈடுபட்டதற்காக 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் முதல் முறை சிக்கும்போது அவர்கள் மீது பி.என்.எஸ்.எஸ்., சட்டத்தின்படி 1 லட்சம் ரூபாய் பத்திரத்தில், வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு கையெழுத்து வாங்கப்படும். இந்த நபர்கள் மீண்டும் ஒரு முறை சாகசம் செய்து சிக்கினால் பத்திரத்தின்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இது போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதும், ஆயுதங்களை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இவர்கள் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

