sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மைசூரில் 'மக்கள் ஆக்ரோஷ' யாத்திரையை துவக்கியது பா.ஜ.,

/

மைசூரில் 'மக்கள் ஆக்ரோஷ' யாத்திரையை துவக்கியது பா.ஜ.,

மைசூரில் 'மக்கள் ஆக்ரோஷ' யாத்திரையை துவக்கியது பா.ஜ.,

மைசூரில் 'மக்கள் ஆக்ரோஷ' யாத்திரையை துவக்கியது பா.ஜ.,


ADDED : ஏப் 08, 2025 05:20 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு; காங்கிரஸ் அரசை கண்டித்து மைசூரில் இருந்து மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை, பா.ஜ., நேற்று துவக்கியது.

காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு மக்கள் நியாயம் கேட்கும் விதமாக பெங்களூரு சுதந்திர பூங்காவில், கடந்த 2ம் தேதி காலை முதல் மறுநாள் காலை வரை, இரவு - பகல் போராட்டத்தை பா.ஜ., நடத்தியது.

ஏப்ரல் 7ம் தேதி முதல் பா.ஜ., சார்பில் அரசுக்கு எதிராக, 'மக்கள் ஆக்ரோஷ' யாத்திரை நடத்தப்படுமென, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவித்திருந்தார்.

சாமி தரிசனம்


அதன்படி நேற்று காலை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் மைசூருக்கு வந்தனர்.

சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். கோவில் முன் தேங்காய் உடைத்தனர். பின், மைசூரு நகருக்கு வந்தனர்.

மாலை 4:00 மணிக்கு நகரில் உள்ள காந்தி சதுக்கத்தில் இருந்து, மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை பிரஹலாத் ஜோஷி துவக்கி வைத்தார். திறந்த வாகனத்தில் தலைவர்கள் பேரணியாக சென்றனர். பின், சாலையில் இறங்கி நடந்து சென்று, மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் உள்ளிட்ட தலைவர்கள், மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்ட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தந்திர அரசியல்


யாத்திரையை துவக்கி வைத்து பிரஹலாத் ஜோஷி பேசியதாவது:

ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றும் நோக்கில், இந்த யாத்திரை துவங்கப்பட்டு உள்ளது. அரசை அகற்ற நான் உறுதி பூண்டுள்ளேன். கிரஹலட்சுமி திட்டத்தில் நிலுவையில் உள்ள பணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பால் மானியத்தை விரைவில் கொடுங்கள். பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டது இருப்பது வேதனையின் உச்சம்.

காங்கிரஸ் ஆட்சியில் இதுவரை 48 பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது சித்தராமையாவின் சாதனை. வயநாட்டில் யானை மிதித்து இறந்தவர் குடும்பத்திற்கு கர்நாடக பணம் 25 லட்சம் ரூபாயை வழங்குகின்றனர். இறந்தவர் கேரளாவை சேர்ந்தவர். யானை கர்நாடகா வனப்பகுதிக்கு உரியது என்று கதை சொல்கின்றனர்.

நம் மாநிலத்தில் யானை தாக்கி யாராவது இறந்தால், ஐந்து லட்சம் ரூபாய் தான் கொடுக்கின்றனர். என்ன ஒரு தந்திரமான அரசியல்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. 'முத்தலாக்'கிற்கு தடை, சி.ஏ.ஏ., அமல்படுத்துவது குறித்து, நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தவறான தகவலை சொல்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்களின் குரல்


விஜயேந்திரா பேசியதாவது:

காங்கிரஸ் அரசு ஏழை மக்கள், விவசாயிகள், ஹிந்துக்களுக்கு எதிரானது. இதுவரை 16 பட்ஜெட்டை சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். மாநிலத்திற்கு அவரது பங்களிப்பு என்ன என்று, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தன் ஊரான மைசூரு மாவட்டத்துக்கே முதல்வரால் எதுவும் செய்ய முடியவில்லை. எங்களால் துவங்கப்பட்ட இந்த யாத்திரை, மக்களின் குரலாக மாறும்.

காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத கொள்கையை, மக்களிடம் கொண்டு செல்லவே இந்த யாத்திரை துவங்கப்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பு அஹிந்தா சமூகம் பற்றி பேசிய முதல்வர், நாற்காலியில் அமர்ந்த பின் அனைத்தையும் மறந்துவிட்டார்.

எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்காக பயன்படுத்த வேண்டிய 38,000 கோடி ரூபாய் நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்தி உள்ளனர். சிறுபான்மையினருக்கு மட்டும் அள்ளி கொடுக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த மாதம் 3ம் தேதி வரை யாத்திரை நடக்கிறது. இன்று மாண்டியா, ஹாசனில் நடக்க உள்ளது.

விலை உயர்வே சாதனை


அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்துவதே காங்கிரஸ் அரசின் சாதனை. காலையில் ஒரு விலையில் இருக்கும் பொருள், மாலை வேறு விலைக்கு விற்பனை ஆகிறது. இது பா.ஜ., நடத்தும் போராட்டம் இல்லை. மக்களின் போராட்டம். திருடர்களையும், மோசடி செய்பவர்களையும் மீண்டும் தெருவுக்கு கொண்டு வர நாங்கள் முயற்சி செய்கிறோம். சித்தராமையா கொசு, சிவகுமார் பூச்சி போன்றவர்கள்; மக்கள் ரத்தத்தை உறிஞ்சப் பார்க்கின்றனர்.

- அசோக், எதிர்க்கட்சித் தலைவர், சட்டசபை

தொடரும் போராட்டம்


நாடு முழுவதும் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்துவிட்டது. கன்னடர்களின் பணத்தை கொள்ளையடித்து கட்சியை கட்டமைக்க பார்க்கின்றனர். மேலிடத்தை மிரட்டி தான் சித்தராமையா இன்னும் பதவியில் உள்ளார். அவர் முதல்வராக இருக்க முடியாத சூழ்நிலை வந்தால், தன் ஆதரவாளர்கள் யாரையாவது பதவிக்கு கொண்டு வருவார். ஆனால் எங்கள் கட்சி அப்படி இல்லை. பலரை முதல்வராக்கி அழகு பார்த்துள்ளது. மக்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும்.

- சலவாதி நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர், மேல்சபை






      Dinamalar
      Follow us