/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணிடம் அநாகரிகம் பா.ஜ., தலைவர் நீக்கம்
/
பெண்ணிடம் அநாகரிகம் பா.ஜ., தலைவர் நீக்கம்
ADDED : மே 13, 2025 12:23 AM

தட்சிண கன்னடா : சாலைப் பணிகள் குறித்து கேள்வி கேட்டபோது, பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை கட்சியில் இருந்து பா.ஜ., நீக்கி உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வாலின் இட்கிடு கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் பத்மநாபன். இவர் பா.ஜ.,வை சேர்ந்தவர்.
இதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கிராமத்தில் உள்ள சாலையின் நிலை குறித்து, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து, பத்மநாபனிடம் கேள்வி கேட்க வந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே 'கேட்' பொருத்தும் பணியை பார்த்தார். அங்கு பத்மநாபனும் இருந்தார். ''எதற்காக சாலையின் குறுக்கே கேட் அமைக்கிறீர்கள்?'' என, அவரிடம் பெண் கேட்டார்.
இதனால் கோபமடைந்த பத்மநாபன், தான் அணிந்திருந்த டிராயரை கழற்றி, காண்பித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, விட்டலா போலீஸ் நிலையத்தில், அப்பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, பத்மநாபனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதுடன், கட்சியில் இருந்தும் நீக்கி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உத்தரவிட்டுள்ளார்.