கூட்டணி! 2028 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., - ம.ஜ.த.,
கூட்டணி! 2028 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., - ம.ஜ.த.,
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 07:04 PM

கர்நாடகாவில் 2000ம் ஆண்டுக்கு பின், கூட்டணி அரசு ஆட்சி அமைப்பது தொடர் கதையாகி உள்ளது.
கர்நாடகாவில், கடந்த 2004ல் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்தது. அதன் பின், குமாரசாமி தலைமையில், பா.ஜ.,வுடன், 2006ல் கூட்டணி அமைத்து.
அப்போது குமாரசாமி முதல்வராகவும், எடியூரப்பா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆட்சி அதிகாரம் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், 2007ல் கூட்டணி முறிந்தது.
அதன் பின், இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வந்தனர். 2008ல் நடந்த சட்டசபை தேர்தலில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின், ம.ஜ.த.,வின் எம்.எல்.ஏ.,க்கள் பலம் ஒவ்வொரு தேர்தலிலும் சரிந்து கொண்டே வந்தது.
கடந்த 2018ல் பா.ஜ.,வுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பா.ஜ.,வுக்கு அதிகாரத்தை வழங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் தலைமை, தேர்தல் எண்ணிக்கையன்று மாலை குமாரசாமி வீட்டின் முன் அக்கட்சி தலைவர்கள் குவிந்தனர்.
இரண்டாவது முறை
இதையடுத்து, ம.ஜ.த., - காங்கிரஸ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்தது. ஓராண்டு நீடித்த இந்த கூட்டணி, பா.ஜ.,வின், 'ஆப்பரேஷன் தாமரை'யால், இவ்விரு கட்சிகளை சேர்ந்த, 17 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர். இதையடுத்து, கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சியை பிடித்தது.
அதை தொடர்ந்து, 2023ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த. இணைந்தது. தொடர்ந்து கர்நாடகாவில் நடந்த பல்வேறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகின்றன.
மத்திய அமைச்சராக, ம.ஜ.த.,வின் குமாரசாமி உள்ளார்.
100 சதவீதம்
இந்நிலையில், தாவணகெரே மாவட்டம், ஷாமனுாரில் நேற்று தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது, எடியூரப்பா அளித்த பேட்டி:
குமாரசாமியும், நாங்களும் வேறு அல்ல. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் என்பதில், 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. அடுத்த முறை பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து போராடும்.
ஊழல் நிறைந்த மாநில காங்கிரஸ் அரசு அகற்றப்பட்டு, பா.ஜ., - ம.ஜ.த., அரசு அமைய வேண்டும்.
மாநில அரசு பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்கிறது. இந்த அரசுக்கு வறட்சி பற்றியோ, மக்களின் துன்பம் பற்றியோ கவலையில்லை. ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ.,க்களை பெற்று, பெரும்பான்மை பெற்ற மமதையில், மாநிலத்தில் 'துக்ளக் தர்பார்' நடத்துகின்றனர்.
பல விமர்சனங்கள் இருந்தபோதும், சிவகுமார் அரசு, சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லை.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கில், அவருக்கு எதிராக, 'ஸ்டிங் ஆப்பரேஷன்' எனும் ரகசிய புலனாய்வு நடவடிக்கை நடத்தப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்த சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கையை சீரழிக்க நடக்கும் இந்த முயற்சிகளின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பதை கர்நாடக மக்கள் நன்கு அறிவர்.
அவரை சுற்றி நடக்கும் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும், அமைதியாக கவனித்து வருகிறார். இது கர்நாடக அரசியலில் மிக முக்கியமானது. அடுத்தடுத்து வெளிவரும் நிகழ்வுகள், இதை உறுதிபடுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறுபக்கம்
அதேவேளையில், ஹாசனில் நேற்று மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:
கர்நாடகாவில், வரும் 2028ல் மாநிலத்தில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும். அப்போது என்னுடைய மற்றொரு பக்கத்தை காட்டுவேன். சித்தராமையா இல்லை என்றால், காங்கிரஸ் கட்சி எப்போதோ பலவீனம் அடைந்திருக்கும். ஒரு கட்சியால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியாது. இன்னும் ஓராண்டுக்குள் அரசியல் சூழல் மாறும். சித்தராமையாவுக்கு எதிரான எழுந்துள்ள சர்ச்சையின் பின்னணியில் முதல்வர் சிவகுமார் உள்ளார்.
சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்காக, அப்போது துணை முதல்வராக இருந்த சிவகுமார், ஒரு தனியார் தொலைகாட்சியுடன் இணைந்து, ரகசிய புலனாய்வு நடத்த சதித்திட்டம் தீட்டினார்.
போலீஸ் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் எதிராக, ரகசிய புலனாய்வு நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு, குமாரசாமி கூறினார்.
