நிதித்துறை எச்சரிக்கை எதிரொலி அரசுக்கு எதிராக பா.ஜ., போராட்டம்
நிதித்துறை எச்சரிக்கை எதிரொலி அரசுக்கு எதிராக பா.ஜ., போராட்டம்
ADDED : செப் 25, 2026 04:03 AM

பெங்களூரு: புதிய திட்டங்களுக்கு நிதி இல்லை என்ற, நிதித்துறை எச்சரிக்கை எதிரொலியாக, அரசுக்கு எதிராக, பா.ஜ., பல இடங்களில் நேற்று போராட்டம் நடத்தியது.
கர்நாடக அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களுக்கு ஒதுக்க நிதி இல்லை; வருவாய் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கிரஸ் அரசு கர்நாடகாவை திவாலாக்கி விட்டதாக, எதிர்க்கட்சியான பா.ஜ., சட்டசபையில் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், அரசை கண்டித்து மைசூரு, ஷிவமொக்கா, பல்லாரி உட்பட பல இடங்களில், பா.ஜ., சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.
இதற்கு பதிலளித்து, முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
நிதித்துறை, எங்கள் அரசுக்கு மட்டுமல்ல, இதற்கு முன் இருந்த அரசுக்கும் எச்சரிக்கை, அறிவுரை வழங்கியுள்ளது. எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முதல்வர்களாக இருந்தபோது, நிதித்துறை எச்சரிக்கை செய்ததற்கான ஆவணங்களை நான் வெளியிட முடியும். பா.ஜ.,வினர் அரசியல் செய்கின்றனர்.
அவர்கள் விரும்பினால் எனது ராஜினாமாவை வாங்கி கொள்ளட்டும். பா.ஜ., ஆட்சி காலத்தில் நீர்ப்பாசன துறையில் எவ்வளவு பணம் இருந்தது. எத்தனை பணிகள் கொடுத்தனர் என்ற தகவல் என்னிடம் உள்ளது. விமர்சிப்பது எளிது. பிரச்னைகளை கையாளுவது சவால். திறம்பட நாங்கள் கையாளுவோம்.
பா.ஜ.,வை போல ஜாதி, மதத்தின் அடிப்படையில் நாங்கள் அரசியல் செய்தது இல்லை.
இவ்வாறு கூறினார்.
