பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக பெங்களூரில் பா.ஜ., போராட்டம்
பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக பெங்களூரில் பா.ஜ., போராட்டம்
ADDED : ஜூலை 18, 2026 12:11 AM

பெங்களூரு: பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக, பெங்களூரு சுதந்திர பூங்காவில் பா.ஜ., நேற்று போராட்டம் நடத்தியது.
ராம்நகரின் பிடதியில் டவுன்ஷிப் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தியும், திட்டத்திற்கு எதிராகவும், பெங்களூரு சுதந்திர பூங்காவில் கர்நாடக பா.ஜ., சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டத்தில் விஜயேந்திரா பேசியதாவது:
காங்கிரஸ் மேலிடத்திற்கு லாபம் ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில், டவுன்ஷிப் திட்டங்களை முதல்வர் சிவகுமார் கையில் எடுத்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை அவர் மதிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் நலனை விரும்பும் முதல்வராக சிவகுமார் உள்ளார். குண்டர்களை அனுப்பி விவசாயிகளை மிரட்டுகிறார்.
சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால், பிடதி டவுன்ஷிப் திட்ட பணிகளை டி.எல்.எப்., நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவதாக, காங்கிரஸ் தேசிய பொது செயலர் பிரியங்காவிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற சிவகுமார் துடிக்கிறார்.
இதற்காக விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார். முதல்வராக இருப்பதற்கு பதில், ரியல் எஸ்டேட் பிரமுகராக சிவகுமார் இருக்கலாம். விவசாயிகள் நலனை பாதுகாப்பதாக கூறிய ராகுல் எங்கே?
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசுகையில், ''மாநிலத்தின் கடுமையான வறட்சி நிலவுகிறது. மக்கள் பிரச்னைக்கு செவிசாய்க்காமல், அதிகாரத்தை கைப்பற்றவும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் ஆதரவாக காங்கிரஸ் அரசு உள்ளது. இவர்கள் துக்ளக் தர்பார் ஆட்சி நடத்துகின்றனர். பிடதி டவுன்ஷிப் திட்டத்தை நிறைவேற்றி, காங்கிரஸ் மேலிடத்திற்கு கருப்பு பணம் கொடுக்க முயற்சி நடக்கிறது,'' என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், ''ரியல் எஸ்டேட் தொழிலை வளர விட்டதே, முதல்வர் சிவகுமார் சாதனையாக உள்ளது. அவரது பிடிவாதத்தால், பிடதி டவுன்ஷிப் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் திட்டத்தை கைவிடுவோம்,'' என்றார்.
